தேடுதல்

Vatican News
மத்ரீத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்து மத்ரீத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்து   (ANSA)

மத்ரீத்துக்கு திருத்தந்தையின் இரங்கல் தந்தி

இஸ்பெயின் நாட்டில், எரிவாயு விபத்தால் துயர்களை அனுபவிக்கும் மக்களுக்காக, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி, ஆறுதலளிக்கும் அப்போஸ்தலிக்க ஆசீரை அனுப்பும் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஸ்பெயின் தலைநகர் மத்ரீத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்து குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையை வெளியிடும் இரங்கல் தந்தி ஒன்றை, அந்நாட்டு தலத்திரு அவைக்கு அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர்.

தலைநகர் மத்ரீத்தின் பேராயர், கர்தினால் Carlos Osoro Sierra அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பபீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், இந்த விபத்து குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் நெருக்கத்தை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும், இறைவனிடம் இறைவேண்டல் செய்வதாகவும், துயர்களை அனுபவிக்கும் மக்களுக்காக அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவதாகவும், தன் இதயத்திலிருந்து, ஆறுதலளிக்கும் அப்போஸ்தலிக்க ஆசீரை அனுப்புவதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

மத்ரீத்திலுள்ள "Virgen de la Paloma" என்ற பங்குத்தளத்தைச் சேர்ந்த கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடி விபத்தில் 3 பேர் இறந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் உரைத்த அந்நகர மேயர் José Luis Martínez-Almeida அவர்கள், அதே வளாகத்திலிருந்த பள்ளிக்கும், மருத்துவ மையத்திற்கும் எவ்வித சேதமும் இல்லை என்று கூறினார்.

எரிவாயு  வழியாக செயல்படும் சுடுநீர் கலம் ஒன்றை பழுதுபார்த்துக் கொண்டிருந்த வெளையில், இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறை அறிவித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற கட்டடத்தின் ஒரு பகுதி, அருள்பணியாளர்களும், திருஅவைப்பணியாளர்களும் தங்கியிருக்கும் இல்லமாகவும் இருந்தது.

இந்த இல்லத்தில் தங்கியிருந்த 36 வயது நிறைந்த அருள்பணி Rubén Pérez Ayala அவர்கள், வெடிவிபத்தில் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவர், சிகிச்சை பலனின்றி, சனவரி 21 இவ்வியாழனன்று இறைவனடி சேர்ந்தார் என்றும், மத்ரீத் பேராயர், கர்தினால் Carlos Osoro Sierra அவர்கள் அறிவித்தார்.

ஏழு மாதங்களுக்கு முன், தன் கரங்களால் அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்ட அருள்பணி Ayala அவர்கள், கிறிஸ்துவுக்காகவும், திருஅவையின் மக்களுக்காகவும் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர் என்று, கர்தினால் Osoro அவர்கள் கூறியுள்ளார்.

21 January 2021, 15:15