தேடுதல்

Vatican News
இறைவார்த்தை ஞாயிறு திருப்பலி - 240121 இறைவார்த்தை ஞாயிறு திருப்பலி - 240121  (ANSA)

உண்மைக்கு சான்றுபகர, சமூகத்தொடர்பாளருக்கு அழைப்பு

திருத்தந்தை அவர்களின், ஞாயிறு, மற்றும், திங்கள்கிழமை நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சனவரி 24ம் தேதி, சிறப்பிக்கப்படும் சமூகத்தொடர்பாளர்களின் பாதுகாவலரான புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் அவர்களின் திருவிழா, உலக சமூகத்தொடர்பு நாளாகவும் சிறப்பிக்கப்படுவதைப் பற்றி, இஞ்ஞாயிற்றுக்கிழமை, தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'வந்து பாருங்கள்' என்ற தலைப்பில், இந்நாளுக்கென தான் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதையும் நினைவூட்டிய திருத்தந்தை, எவரும் செல்ல விரும்பாத இடத்திற்கும் சென்று உண்மைக்குச் சான்றுபகர்பவர்களாக ஒவ்வொரு சமூகத்தொடர்பாளரும் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

மேலும், இத்திங்கள்கிழமையன்று, நிறைவுக்குவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவாரம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திங்கள்கிழமை மாலை உரோம் நகர் புனித பவுல் பெருங்கோவிலில் இடம்பெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவழிபாட்டிற்காக அனைவரும் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே, கால்வலி காரணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியிலும், திங்கள்கிழமை நிகழ்சசிகள் அனைத்திலும் பங்கேற்கவில்லை என்று, வத்திக்கான் செய்தித்துறை தலைவர், மத்தேயோ புரூனி (Matteo Bruni) அவர்கள் அறிவித்துள்ளார்.

இறைவார்த்தை ஞாயிறு திருப்பலியில் திருத்தந்தை பங்கேற்காததுடன், திங்கள் மாலை கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு வழிபாட்டில் பங்கேற்க மாட்டார் எனவும், அறிவித்த புரூனி அவர்கள், திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதர்களை, இத்திங்கள் காலையில் திருத்தந்தை சந்திப்பதாக இருந்த நிகழ்வு, வேறொரு நாளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

24 January 2021, 12:57