தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை . 200121 திருத்தந்தையின் மறைக்கல்வியுரை . 200121  (ANSA)

மறைக்கல்வியுரை : கிறிஸ்தவ ஒன்றிப்பு இறைவேண்டல் வாரம்

திருத்தந்தை : இந்த துன்பகரமான வேளைகளில், ஆண்டவரின் ஒப்புரவு அன்பிற்குச் சான்றுகளாக விளங்கவும், ஒன்றிப்பின் பாதையில் நிலைத்திருக்கவும், அழைப்புப் பெற்றுள்ளோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கடந்த பல வாரங்களாக இறைவேண்டல் குறித்த தன் மறைக்கல்வி சிந்தனைகளை, தன் நூலக அறையிலிருந்தே வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், அதாவது, சனவரி 18 முதல் 25 வரை, கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் சிறப்பிக்கப்பட்டுவருவதை முன்னிட்டு, 'கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காக இறைவேண்டல்' என்ற தலைப்பில் தன் சிந்தனைகளை பகிர்ந்துகொண்டார்.  முதலில், யோவான் நற்செய்தி 17ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட, திருத்தந்தையின் மறைக்கல்வியுரை துவங்கியது.

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, , […]  நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள்.  அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும். (யோவா 17,1.9.20-21)

அன்பு சகோதரரே, சகோதரிகளே, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 18ம் தேதி முதல் 25 வரை கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான இறைவேண்டல் வாரத்தை நாம் கொண்டாடுகிறோம். மோதல்களாலும், பிரிவினைகளாலும் சிதறுண்டு நிற்கும் இவ்வுலகிற்கு நற்செய்தியை எடுத்துரைக்கும் நோக்கத்தில், நமக்கு, ஒன்றிப்பு எனும் கொடையை அருளுமாறு இறைத்தந்தையிடம் தனிப்பட்ட விதத்தில் இறைவேண்டலை மேற்கொள்ள, இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் அனைவரும் இவ்வாரத்தில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தன் மீட்பளிக்கும் பாடுகள் வழியாக கிறிஸ்து பெற்றுத்தந்த குணப்படுத்தலையும், ஒப்புரவையும் நமக்கு வழங்கவேண்டும் என்பதே, நம் முதன்மை இறைவேண்டலாக,  இந்த முரண்பாடுகள், மற்றும், பிரிவினைகளுக்கான பதிலுரையாக, இருக்கவேண்டும். 'எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!..... இதனால் உலகம் நம்பும்'  (யோவா.17:21), என்ற இயேசுவின் இறுதி இரவு உணவு இறைவேண்டலில் நாமும் பங்குபெற்று, மீட்பை கண்டுகொள்ள அழைப்புப் பெற்றுள்ளோம். இந்த துன்பகரமான வேளைகளில், ஆண்டவரின் ஒப்புரவு அன்பிற்குச் சான்றுகளாக விளங்கவும், முழுமையான, மற்றும், வெளிப்படையான ஒன்றிப்பின் பாதையில் நிலைத்திருக்கவும், கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பெற்றுள்ளோம். “என் அன்பில் நிலைத்திருங்கள், மற்றும், நீங்கள் மிகுந்த கனிதரும்பொருட்டு” (யோவா.15: 5-9) என்ற, இவ்வாண்டு இறைவேண்டல் வாரத்திற்கான தலைப்பு, கிறிஸ்தவர்களிடையே ஒன்றிப்பிற்குரிய அடிப்படை, கிறிஸ்துவின் அன்பே என்பதை நமக்கு நினைவுறுத்தி நிற்கின்றது. மேலும், இதுவே, பிரிவினைகளை வெற்றிகொள்வதற்கு உதவும்  நம்  பன்முகத் தன்மையை தூய ஆவியாரில் அடையாளம் கண்டுகொள்வதற்கான முயற்சிகளுக்கு ஒரு தூண்டுதலாகவும் உள்ளது. இணக்கம், நீதி, மற்றும் அமைதியினை உள்ளடக்கிய இறையரசின் பணிக்கு நாமனைவரும் ஒன்றிணைந்து உழைக்கவும், இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வார இறைவேண்டல் தலைப்பு நினைவுறுத்தி நிற்கிறது.

இவ்வாறு தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவரிடையே முழு ஒன்றிப்பு எனும் கொடை கிட்ட வேண்டும் என இறைவனை நோக்கி வேண்டுவோம், என்ற அழைப்பை விடுத்தார். உண்மைக்கும் பிறரன்பிற்கும் அனைவரும் சான்றுகளாக இருங்கள், என்ற அழைப்பையும் முன்வைத்து, முதியோர், நோயாளிகள், மற்றும் புதுமணத்தம்பதியர்களை, தான் நினைவுகூர்வதாக எடுத்துரைத்து, அனைவருக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

20 January 2021, 12:34