தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை - 240121 மூவேளை செப உரை - 240121  (ANSA)

'காலம் நிறைவேறிவிட்டது, மனம் திரும்புங்கள்' - இயேசுவின் அழைப்பு

திருத்தந்தை : பாவம் இவ்வுலகில் நுழைந்தபோது, கடவுளுக்கும், அயலவருக்கும் எதிரான ஒரு மனநிலை நம்மில் உருவாக்கப்பட்டு, வன்முறைகளும், ஏமாற்றுதல்களும் பிறந்தன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்டபின், கலிலேயா பக்கம் வந்த இயேசு கூறிய 'காலம் நிறைவேறிவிட்டது, மனம் திரும்புங்கள்', என்ற கூற்றை மையமாக வைத்து, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 24ம் தேதி, இஞ்ஞாயிற்றுக்கிழமையன்று, தன் நூலக அறையிலிருந்து, நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் நற்செய்தி வாசகத்தை (மாற் 1: 14-20) மையமாக வைத்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

காலம் நிறைவேறியபோது, தன் மகனை அனுப்பி, இறையரசை உலகிற்கு மிக நெருக்கமாக இறைத்தந்தை கொணர்ந்தது, மற்றும், இவ்வுலகின் வழிகளிலிருந்து விலகி, நாம் இறைவனின் வழிகளில் நடைபோட அழைப்பு விடப்படுவது, என்பவை குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவம் இவ்வுலகில் நுழைந்தபோது, கடவுளுக்கும், அயலவருக்கும் எதிரான ஒரு மனநிலை நம்மில் உருவாக்கப்பட்டு, வன்முறைகளும், ஏமாற்றுதல்களும் பிறந்தன என்று கூறினார்.

மீட்பைப்பெறுவதற்கென நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள காலம் மிக்க் குறுகியது, ஏனெனில், இவ்வுலகில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாழ்வுக்காலமே அது, என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறை அன்பின் கொடையாக வழங்கப்பட்டுள்ள நம் வாழ்வில், கடவுளுக்கும், அயலவருக்கும் அன்பை நிரூபிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உலகப்போக்கு எனும் மனநிலைகளிலிருந்து நம்மை மாற்றி, அன்பு, சேவை எனும் மனநிலைக்கு நாம் மாற, அன்னை மரியா நமக்கு உதவுவாராக எனவும் வேண்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட இறைவார்த்தை ஞாயிறு குறித்தும் தன் மூவேளை செபஉரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியை மேலும் மேலும் வாசித்து அதன் பொருளைக் கண்டுகொள்ள அனைவருக்கும் ஊக்கமளித்ததுடன், 'நற்செய்தியைப் புறக்கணிப்பது, இயேசுவையே புறக்கணிப்பதாகும்' என்று கூறிய புனித ஜெரோமின் வார்த்தைகளை மேற்கோளாக சுட்டிக்காட்டினார்.

24 January 2021, 12:43