தேடுதல்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகமான Capitol அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகமான Capitol 

அமெரிக்காவில் மக்களாட்சி பாதுகாக்கப்பட்டு, ஒப்புரவு ஊக்குவிக்கப்பட

திருத்தந்தை: கோப உணர்வுகளைக் களைந்து, பொறுப்புடன் செயல்படுவதுடன், அமெரிக்க சமுதாயத்தில் வேரூன்றியுள்ள சனநாயக மதிப்பீடுகளைப் பாதுகாத்து, தேசிய ஒப்புரவை ஊக்குவிக்க உழையுங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில், மக்களாட்சி பாதுகாக்கப்பட்டு, ஒப்புரவு ஊக்குவிக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகமான Capitol மீது சனவரி 6, இப்புதனன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஜனவரி 10, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின இறுதியில் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை என்பது, தன்னிலேயே அழிவை கொணரும் என்றும், வன்முறையால் பெறப்படுவது இழப்பு ஒன்றே என்றும் கூறினார்.

ஆண்டவரின் திருமுழுக்கு திருவிழாவன்று, வத்திக்கானில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவந்த திருமுழுக்குச் சடங்கு, கோவிட்-19 பெருந்தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், இவ்வாண்டு இடம்பெறாத நிலையில், தன் நூலக அறையிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார்.

இவ்வுரையின் இறுதியில், அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கு தன் அன்பான வாழ்த்துக்களை வெளியிடுவதாக உரைத்த திருத்தந்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையகமான Capitol மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த ஐந்து பேருக்காக, தான் செபிப்பதாகவும் தெரிவித்தார்.

கோப உணர்வுகளைக் கைவிட்டு, பொறுப்புடன் செயல்படுவதுடன், அமெரிக்க சமுதாயத்தில் வேரூன்றியுள்ள சனநாயக மதிப்பீடுகளைப் பாதுகாத்து, தேசிய ஒப்புரவை ஊக்குவிக்க உழைக்குமாறு, அரசு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் விண்ணப்பம் ஒன்றை விடுப்பதாகவும், தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2021, 13:00