தேடுதல்

திருத்தந்தை விவிலியம் வழங்குகிறார் திருத்தந்தை விவிலியம் வழங்குகிறார் 

பரிவன்பின் மறைப்பணிக்கு திருத்தந்தை அழைப்பு

“நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (தி.பணி.4:20) என்ற கூற்றை மையப்படுத்தி, திருத்தந்தை, 95வது உலக மறைபரப்பு நாள் செய்தியை வெளியிட்டுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தங்கள் அழைப்பை, உண்மையான அன்புக் கதையாக அனுபவிக்கும் திறமைபடைத்த இதயங்கள் இயேசுவுக்குத் தேவைப்படுகின்றன என்றும், அத்தகைய இதயங்கள், உலகின் கடையெல்லைவரை சென்று, தூதுரைப்பவர்களாகவும், பரிவன்பின் தூதர்களாகவும் செயல்படுமாறு, அவர் ஊக்கப்படுத்துகிறார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வாண்டு, அக்டோபர் 3வது ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் 95வது உலக மறைபரப்பு நாளுக்கென்று, சனவரி 29, இவ்வெள்ளியன்று, செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைப்பணிக்கு விடுக்கப்படும் அழைப்பு, கடந்த காலத்தைச் சார்ந்த ஒன்று அல்ல என்றும், இந்த பெருந்தொற்று காலத்திலும் மறைப்பணியாற்ற அழைக்கப்படுகிறோம் என்றும் கூறியுள்ளார்.

நம்மைச் சுற்றிலும், நகரங்களிலும், நம் குடும்பங்களிலும் வாழ்வோரை நினைத்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கோவிட்-19 .பெருந்தொற்று காலத்தில், நம் வட்டத்தை விரிவுபடுத்தி, நம்மைச் சாராதவர்களுக்கும் பணியாற்றுவதில் ஒவ்வொரு நாளும் வளரவேண்டியது மிக முக்கியம் என்று கூறியுள்ளார்.

திருஅவையில் மறைப்பணியாற்றுவோரின் சான்றுகள் பற்றி நாம் தியானிக்கும்போது, அவர்களின் துணிவால் ஊக்கம்பெறுகிறோம், மற்றும், “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுகிறோம்” (லூக்.10:2) என்று, திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.

“நாங்கள் கண்டதையும், கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (தி.பணி.4:20) என்று, திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் தலைமைச்சங்கத்தின்முன் துணிவோடு கூறிய சொற்களை மையப்படுத்தி, திருத்தந்தை தன் மறைபரப்பு நாள் செய்தியை வெளியிட்டுள்ளார்.

திருத்தூதர்களின் அனுபவங்கள்

ஆண்டவர், ஒவ்வொருவரோடும் நட்போடு உரையாடி அவர்களை அழைக்க பேரார்வம் கொண்டதிலிருந்து நற்செய்தி அறிவிப்புப்பணியின் வரலாறு ஆரம்பமாகிறது என்றும், இயேசுவை தாங்கள் முதன்முதலில் சந்தித்த நாள் மற்றும், நேரம் பற்றிக்கூட, முதலில் நமக்குக் கூறியவர்கள் திருத்தூதர்கள் என்றும் உரைத்துள்ள திருத்தந்தை, திருத்தூதர்கள் போன்று, காரியங்கள் வித்தியாசமாக இருக்கமுடியும் என்பதை, நாமும், பார்த்திருக்கின்றோம், கேட்டு, அனுபவிக்கின்றோம் என்று கூறினார்.

பெருந்தொற்று முன்வைக்கும் சவால்கள்

பலர் அனுபவிக்கும், வேதனை, தனிமை, வறுமை, மற்றும் அநீதிகளை, கோவிட்-19 பெருந்தொற்று முன்னிலைப்படுத்தி, அவற்றை விரிவுபடுத்தியுள்ளது என்றும், அது, போலியான பாதுகாப்பு உணர்வையும், நம் இயலாமையையும் வெளிப்படுத்தியுள்ளது, இப்பெருந்தொற்றால், நம்மில் பலர் நம்பிக்கையை இழக்கச்செய்யும் எதிர்மறை உணர்வுகளுக்கு உள்ளாகியுள்ளோம், எனினும், நம் சமுதாயங்களில், ஆண்டவர் உயிர்த்துவிட்டார் என்ற நம்பிக்கை செய்தியைக் கேட்கிறோம், இந்த நம்பிக்கையால் தூண்டப்படுகிறவர்கள், துணிவைப் பெறுகின்றனர் என்றும், திருத்தந்தையின் செய்தி உரைக்கின்றது. 

இக்காலத்தில், நலவாழ்வுக்காக சமுதாய இடைவெளி என்ற பெயரில், புறக்கணிப்பு நியாப்படுத்தப்படுகின்றது, இவ்வேளையில், சந்திப்பு மற்றும், பிறர்மீது அக்கறை கொள்ளத் தேவைப்படும், பரிவன்பின் மறைப்பணி தேவைப்படுகிறது என்றும், இதற்கு, முதல் மறைப்பணி திருத்தூதராகிய அன்னை மரியாவின் பரிந்துரையை மன்றாடுவோம் என்றும், திருத்தந்தையின் 95வது உலக மறைபரப்பு நாள் செய்தி கூறுகின்றது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2021, 15:12