தேடுதல்

Vatican News
திருகாட்சிப் பெருவிழா  திருப்பலி 060121 திருகாட்சிப் பெருவிழா திருப்பலி 060121  (@VaticanMedia)

திருத்தந்தையின் திருகாட்சிப் பெருவிழா மறையுரை

ஆண்டவர் இயேசு, மனித சமுதாயம் முழுவதற்கும் வைத்துள்ள அவரது அன்புத் திட்டத்தை நம் வாழ்வால் வெளிப்படுத்துகின்ற, உண்மையான வழிபடுகின்றவர்களாக நம்மை மாற்ற அவரிடம் மன்றாடுவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

சனவரி 06, இப்புதனன்று, வத்திக்கான் நாட்டிலும், இத்தாலியிலும் ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா சிறப்பிக்கப்பட்டது. இப்புதன் உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், குறைந்த எண்ணிக்கையில் விசுவாசிகளின் பங்கேற்போடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெருவிழா திருப்பலியை நிறைவேற்றினார். அத்திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில், ஆண்டவரை வழிபடுகின்றவர்கள் யார் என்பது பற்றிய தன் சிந்தனைகளை, மூன்று கருத்துக்களை மையப்படுத்தி வழங்கினார். “நம் கண்களை உயர்த்தச் செய்கின்றவர்கள்”, “பயணம் ஒன்றை மேற்கொள்பவர்கள்”, “பார்க்க வைப்பவர்கள்” ஆகியோரே, ஆண்டவரை வழிபடுகின்றவர்கள் என்று சொல்லி, அவை ஒவ்வொன்றுக்கும் திருத்தந்தை விளக்கமளித்தார்.

கீழ்த்திசையின் ஞானிகள் பெத்லகேமுக்குச் சென்றபோது, “குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்” (மத்.2,11) என்று, நற்செய்தியாளர் மத்தேயு, அந்த ஞானிகள் பற்றி விவரிக்கிறார். ஆண்டவரை வணங்குதல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. அது நொடிப்பொழுதில் நடப்பதுமல்ல, மாறாக, அதற்கு குறிப்பிட்ட ஆன்மீக பக்குவம் தேவை மற்றும், அது, ஒரு நீண்ட அகவாழ்வுப் பயணத்தின் கனியாகும். உண்மையில், மனிதருக்கு வணங்குதல் தேவைப்படுகிறது, அதேநேரம், இலக்கை இழக்கும் ஆபத்தையும் நாம் எதிர்நோக்கலாம். உண்மையில், நாம், கடவுளை வணங்கவில்லையென்றால், சிலைகளை வணங்குவோம். நம்பிக்கையாளர்களாக மாறுவதற்குப் பதில், சிலைகளை வழிபடுவோராக மாறுவோம். இந்த நம் காலத்தில், குறிப்பாக, தனிநபர்களாகவும், குழுமமாகவும், நமக்கு வழிபாட்டிற்கு அதிகநேரம் ஒதுக்கவேண்டிய தேவை உள்ளது. ஆண்டவரை சிறந்தமுறையில் எவ்வாறு தியானிக்கலாம் என்பதை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு இன்று ஞானிகளிடமிருந்து சில பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொள்வோம். ஆண்டவரை வழிபடுகின்றவர்களாக இருப்பது என்பதன் அர்த்தம் என்ன என்பதை, மிகத் தெளிவாக நாம் புரிந்துகொள்ள, இன்றைய திருவழிபாடு உதவுகின்றது.    

நம் கண்களை உயர்த்தச் செய்கின்றவர்கள்

முதலாவது, நம் கண்களை உயர்த்தச் செய்கின்றவர்கள் என்ற கூற்று. இது, இறைவாக்கினர் எசாயாவிடமிருந்து வருகிறது. நாடுகடத்தப்பட்டு, பல்வேறு சவால்கள் மற்றும், துன்பங்களால் நம்பிக்கையிழந்து, அண்மையில் எருசலேம் திரும்பியிருந்த மக்களிடம், “உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்” (எசா.60:4) என்ற வல்லமைமிக்க வார்த்தைகளால், இறைவாக்கினர் எசாயா, அவர்களை ஊக்கமூட்டினார். தங்களின் மனக்கவலைகள் மற்றும், புகார்கள், தன்னாதிக்கம், குறுக்கு வழியில் சிந்திப்பது, தங்களைப் பற்றியே கருத்தாய் இருப்பது போன்றவற்றை ஒதுக்கிவிடுமாறு எசாயா அந்த மக்களை வலியுறுத்தினார். ஆண்டவரை வணங்குவதற்கு, முதலில் நம் கண்களை உயர்த்தவேண்டும். அதாவது, நம்பிக்கையை இழக்கவைக்கும் கற்பனைகளில் சிறைப்பட்டுவிடாமல், நமது பிரச்சனைகள் மற்றும், துன்பங்களை, நம் வாழ்வின் மையமாக்காமல் வாழ்வதாகும். இவ்வாறு சொல்வது எதார்த்தத்தைப் புறக்கணிப்பதல்ல, மாறாக, பிரச்சனைகளையும், கவலைகளையும், ஆண்டவர் அறிந்துள்ளார், அவர், நம் மன்றாட்டுக்களைக் கவனமுடன் கேட்கிறார், நாம் சிந்தும் கண்ணீரை அவர் புறக்கணிப்பதில்லை என்ற உணர்வில், புதிய வழியில் பார்ப்பதாகும்.

என்ன நேர்ந்தாலும் ஆண்டவரில் தொடர்ந்து நம்பிக்கை வைத்து, காரியங்களை இவ்வாறு நோக்கும்போது அது, பிள்ளைக்குரிய நன்றியுணர்வை நம்மில் எழுப்பும். இது நடைபெறும்போது, நம் இதயங்கள் அவரை வணங்குவதற்குத் திறந்திருக்கும். அவர், நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை நாம் பார்ப்போம். கடவுளை நோக்கி நம் கண்களை உயர்த்தும்போது, வாழ்வின் பிரச்சனைகள் நம்மைவிட்டு அகலாது, ஆனால், அப்பிரச்சனைகளைச் சமாளிக்கக்கூடிய சக்தியை ஆண்டவர் அருளுகின்றார் என்பதை உணர்வோம். செல்வம், வெற்றி, மற்றும், அதைப்போன்ற பொருள்களில் உலக இன்பங்கள் சார்ந்திருக்கும். ஆனால், கிறிஸ்துவின் சீடர்களின் மகிழ்வு, கடவுளின் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது.  

பயணப்படுதல்

இரண்டாவது கூற்று பயணப்படுதல். மூன்று கீழ்த்திசை ஞானிகள், பெத்லகேமில் குழந்தை இயேசுவை வணங்குவதற்குமுன், அவர்கள், நீண்டதொரு பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. “அந்நாள்களில் கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்” (மத்.2:1-2) என, நற்செய்தியாளர் மத்தேயு கூறுகிறார்.  ஒரு பயணம், எப்போதும், அகமாற்றத்தில் மற்றும், ஒரு மாற்றத்தில் ஈடுபடுத்துகின்றது. ஒரு பயணம் மேற்கொண்டபின் நாம் முன்பிருந்ததுபோல் இருப்பதில்லை. அதில், புதிய காரியங்களைக் கற்றுக்கொள்கிறோம், புதிய மனிதர்களையும், புதிய சூழல்களையும் சந்திக்கிறோம், வழியில் சந்தித்த கஷ்டங்கள் மற்றும், ஆபத்துக்கள் மத்தியில், அகத்தில் வலிமையை கண்டுகொள்கிறோம்.

ஒரு பயணத்திலிருந்து கிடைத்த உள்ளார்ந்த வளர்ச்சியை முதலில் அனுபவிக்காமல், எவரும் ஆண்டவரை வணங்குவதில்லை. படிப்படியான செயல்முறை வழியாகவே நாம் ஆண்டவரை வணங்குகிறவர்களாக மாறுகிறோம். நமது வழிபாடு, நமது முப்பதுகளில் நடந்ததைவிட, ஐம்பதுகளில் வித்தியாசமாக இருப்பதை அனுபவம் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. புனித பவுல், “எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப் பெற்று வருகிறது. எனவே நாங்கள் மனந்தளருவதில்லை” (காண்க. 2 கொரி.4:16) என்று சொல்கிறார். ஞானிகள் போன்று, நாமும் வாழ்வின் பயணத்திலிருந்து கற்றுக்கொள்ள நம்மையே அனுமதிக்கவேண்டும்.

பார்ப்பதற்கு

மூன்றாவது கூற்று, பார்ப்பதற்கு. “வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்” (மத்.2:10-11) என்று நற்செய்தியாளர் மத்தேயு சொல்கிறார். வணங்குதல் என்பது, உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் மற்றும், மிக மதிப்புமிக்கவர்களுக்கு செலுத்தப்படும் ஒரு செயல். ஞானிகள் யூதர்களின் அரசர் என தாங்கள் அறிந்து வைத்திருந்த ஒருவரை வணங்கினார்கள் (காண்க. மத்.2:2).  ஆனால் அவர்கள் உண்மையில், ஏழையான குழந்தை மற்றும், அதன் தாயைத்தான் கண்டார்கள். ஆயினும், தொலைத்தூரத்திலிருந்து வந்த அந்த ஞானிகள், அந்த இடத்தின் சூழல்களையும் கடந்து, அந்தக் குழந்தையை அரசராக அங்கீகரித்தனர். புறத்தோற்றங்களைக் கடந்து பார்ப்பதற்கு அவர்களால் முடிந்தது. பெத்லகேம் குழந்தையின்முன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து, தங்களின் இதயங்களைக் காணிக்கைக் கொடுப்பதன் அடையாளமாக பரிசுகளைக் கொடுத்தனர். எனவே ஆண்டவரை வணங்குவதற்கு, காணக்கூடிய பொருள்களின் திரைக்கு அப்பால் நாம் பார்க்கவேண்டும். அது பலநேரங்களில் ஏமாற்றுவதாக இருக்கும்.

ஏரோதும், எருசலேமின் முக்கிய குடிமக்களும், உடனடியான கவர்ச்சிகளுக்கும், புறத்தோற்றங்களுக்கும் அடிமைகளாய் இருக்கும் உலகப்போக்கைக் குறிக்கின்றனர். ஆனால் ஞானிகளில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை நாம் பார்க்கிறோம். அதனை இறையியல் எதார்த்தம் (மெய்மை) என்று சொல்லலாம். காணக்கூடியதைக் கடந்து நின்று நாம் பார்க்கும் முறை, ஒவ்வொரு நாளைய சூழல்களிலும், வறியோரிலும், சமுதாயத்தின் விளிம்புநிலைகளில் இருப்போரிலும் பலநேரங்களில் மறைந்திருக்கும் ஆண்டவரை வணங்குவதற்கு இயலக்கூடியதாக ஆக்குகிறது. ஒலி மற்றும், ஆவேசத்தால் தாக்கப்படாத பார்க்கும் ஒரு முறை, ஒவ்வொரு சூழலிலும் உண்மையானதைப் பார்க்கத் தேடுகின்றது. புனித பவுலும், “காண்பவற்றையல்ல, காணாதவற்றை நோக்கியே வாழ்வோம். காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை” (2கொரி.4:18) என்று கூறியுள்ளார்.

ஆண்டவர் இயேசு, மனித சமுதாயம் முழுவதற்கும் வைத்துள்ள அவரது அன்புத் திட்டத்தை நம் வாழ்வால் வெளிப்படுத்துகின்ற, உண்மையான வழிபடுகின்றவர்களாக நம்மை மாற்ற அவரிடம் மன்றாடுவோம். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருக்காட்சிப் பெருவிழாவில் மறையுரையாற்றினார். 

06 January 2021, 14:49