தேடுதல்

சிஸ்டீன் சிற்றாலயத்தில் திருமுழுக்கு அருளடையாள சடங்கு திருப்பலி - கோப்புப் படம் 2020 சிஸ்டீன் சிற்றாலயத்தில் திருமுழுக்கு அருளடையாள சடங்கு திருப்பலி - கோப்புப் படம் 2020 

வத்திக்கானில் திருமுழுக்கு சடங்கு இவ்வாண்டு இடம்பெறாது

வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் திருமுழுக்கு அருளடையாள சடங்கை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு நிகழ்த்தமாட்டார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருக்காட்சிப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஆண்டவருடைய திருமுழுக்கு திருவிழாவன்று, வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் திருமுழுக்கு அருளடையாள சடங்கை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு நிகழ்த்தமாட்டார் என்று, வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

வத்திக்கானில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த திருமுழுக்கு சடங்கு, கோவிட்-19 பெருந்தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மதித்து, சனவரி 10, வருகிற ஞாயிறன்று இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டவருடைய திருமுழுக்கு திருவிழாவன்று, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கும் வழக்கத்தை, 1981ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், வத்திக்கானில் அமைந்துள்ள பவுல் சிற்றாலயத்தில், 9 குழந்தைகளுக்கு வழங்கிய திருமுழுக்குடன் துவக்கிவைத்தார்.

அதற்கடுத்த ஆண்டு முதல், திருத்தந்தையரைத் தெரிவு செய்யும் புகழ்மிக்க சிஸ்டீன் சிற்றாலயத்தில், இந்த திருமுழுக்கு சடங்கினை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், நிறைவேற்றி வந்தார்.

இந்த மரபை, தொடர்ந்து பின்பற்றி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டின் துவக்கத்தில், கோவிட்-19 நெருக்கடி எழுவதற்கு முன், சனவரி 12ம் தேதி, 17 ஆண் குழந்தைகள், 15 பெண் குழந்தைகள் என, 32 பேருக்கு திருமுழுக்கு வழங்கினார்.

டிசம்பர் 24 இரவு, கிறிஸ்து பிறப்பு பெருவிழா நள்ளிரவு திருப்பலியுடன் துவங்கும் கிறிஸ்து பிறப்பு காலம், ஆண்டவருடைய திருமுழுக்கு திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.

பல ஐரோப்பிய நாடுகள் உட்பட, உலகின் பல நாடுகளில், இந்த பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்துவருகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 21 இலட்சம் பேர் என்ற எண்ணிக்கையால், இத்தாலி, ஐரோப்பிய நாடுகளில், இரஷ்யா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, நான்காவது இடத்தில் உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2021, 15:33