தேடுதல்

Vatican News
வத்திக்கான் இல்லத்திலுள்ள ஆசீரின் அரங்கத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய “Urbi et Orbi” சிறப்புச் செய்தி வத்திக்கான் இல்லத்திலுள்ள ஆசீரின் அரங்கத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய “Urbi et Orbi” சிறப்புச் செய்தி  (Vatican Media)

கிறிஸ்மஸ் 2020 – திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி

நாம், தாராள மனமுடையவர்களாக, குறிப்பாக, வலுவற்றோர், நோயுற்றோர், வேலை இழந்தோர், பொருளாதார நெருக்கடியில் துன்புறுவோர் ஆகியோருக்கு ஆதரவு தருபவர்களாக மாற, பெத்லகேமின் குழந்தை உதவி செய்வாராக

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 25ம் தேதி, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று திருத்தந்தையர் வழங்கும் “Urbi et Orbi” சிறப்புச் செய்தியும், நிறைபெறுபலன் ஆசீரும், வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தின் மேல்மாடத்திலிருந்து வழங்கப்படும். இவ்வாண்டு, கோவிட்-19 கொள்ளைநோயின் பரவலைத் தடுக்க, இத்தாலிய அரசு விதித்துள்ள தடைகளை கருத்தில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டின் “Urbi et Orbi” சிறப்புச் செய்தியையும், நிறைபெறுபலன் ஆசீரையும், வத்திக்கான் இல்லத்திலுள்ள ஆசீரின் அரங்கத்திலிருந்து வழங்கினார்.

திருத்தந்தை வழங்கிய “Urbi et Orbi” சிறப்புச் செய்தி:

அன்பு சகோதரரே, சகோதரிகளே, கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

இறைவாக்கினர் எசாயாவின், "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்" (எசாயா 9:6) என்ற சொற்களை, ஒவ்வொருவருக்கும் நான் ஒரு செய்தியாகக் கொணர விழைகிறேன்.

ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார். பிறப்பு எப்போதும் நம்பிக்கையின் ஊற்றாக, எதிர்காலத்தின் வாக்குறுதியாக திகழ்கிறது. இந்தக் குழந்தை 'நமக்கு' பிறந்துள்ளார் என்ற சொல், நமக்குள் எல்லைகள், புறக்கணிப்பு இல்லை என்பதைக் காட்டுகிறது.

இந்தக் குழந்தை பிறந்ததால், நாம் அனைவருமே கடவுளை நம் 'தந்தை' என்றழைத்து, அவருடன் பேசமுடிகிறது. இந்தக் குழந்தை பிறந்ததால், நாம் அனைவரும் ஒருவர், ஒருவரை, சகோதரர்கள், சகோதரிகள் என்று அழைக்கமுடிகிறது. வெவ்வேறு நாடு, மொழி, கலாச்சாரத்திலிருந்து நாம் வந்திருந்தாலும், நாம் அனவைரும் சகோதரர்கள், சகோதரிகள்.

சுற்றுச்சூழல் நெருக்கடி, பொருளாதார, சமுதாய சமநிலையின்மை, மற்றும், கொரோனா கிருமியின் பெருந்தொற்று ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வரலாற்றின் இத்தருணத்தில், நாம், சகோதரர்கள், சகோதரிகள் என்பதை உணர்வது மிகவும் முக்கியம். தன் மகன் இயேசுவை நமக்கு வழங்கியதன் வழியே, இந்த உடன்பிறந்த நிலையை இறைவன் உருவாக்கியுள்ளார். இந்த உடன்பிறந்த நிலை, வெறும் சொற்களாலும், எண்ணங்களாலும் உருவானது அல்ல, மாறாக, நடைமுறை வாழ்வின் செயல்கள் வழியே உருவானது. நம்மிடமிருந்து வேறுபட்டவர்களைச் சந்திப்பது, அவர்களின் துன்பங்களில் பங்கேற்பது போன்ற உண்மையான அன்பின் மீது, இந்த உடன்பிறந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒளியாக இவ்வுலகிற்கு வந்த கிறிஸ்துவை நாம் கிறிஸ்மஸ் காலத்தில், கொண்டாடுகிறோம். இந்த ஒளி ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் வந்து சேர்ந்தது. நம்மைச் சூழ்ந்துள்ள இந்தப் பெருந்தொற்று காலத்தில், பல்வேறு நம்பிக்கையின் ஒளிகள் தோன்றுகின்றன. அவற்றில் ஒன்று, தடுப்பூசி மருந்தின் கண்டுபிடிப்பு. இந்த நம்பிக்கை ஒளி அனைவரையும் சென்றடைவதை நாம் உறுதி செய்யவேண்டும். இந்த தடுப்பூசியின் விநியோகத்தை, நாட்டுணர்வு, தனிப்பட்ட காப்புரிமை என்ற காரணங்களால் தடைசெய்யும் சுயநலம் என்ற பெருந்தொற்றை, அறவே நீக்கவேண்டும். இந்த தடுப்பூசியின் உற்பத்தி, விநியோகம் என்ற அனைத்து நிலைகளிலும், பன்னாட்டு கூட்டுறவு முயற்சிகள் முன்னிறுத்தப்படவேண்டுமே தவிர, வர்த்தகப் போட்டிகள் முன்னிறுத்தப்படக் கூடாது. இந்த தடுப்பூசிகள் அதிகம் தேவைப்படும் நலிந்தோரை இது முதலில் சென்றடைவதை அரசுகள் உறுதி செய்யவேண்டும்.

நாம், தாராள மனமுடையவர்களாக, குறிப்பாக, வலுவற்றோர், நோயுற்றோர், வேலை இழந்தோர், பொருளாதார நெருக்கடியில் துன்புறுவோர் ஆகியோருக்கு ஆதரவு தருபவர்களாக மாற, பெத்லகேமின் குழந்தை உதவி செய்வாராக.

நாட்டு எல்லைகளை அறியாத ஓர் உலகளாவிய நெருக்கடியின் முன், நாம் சுவர்களை எழுப்ப இயலாது. நாம் அனைவருமே ஒரே படகில் இருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள அனைவர் முகத்திலும், குறிப்பாக, தேவைகள் அதிகம் உள்ளோர், புலம் பெயர்ந்தோர், குடியேற்றதாரர், ஒதுக்கப்பட்டோர் ஆகியோர் முகத்தில் ஆண்டவரின் முகத்தைக் காணும்படி, ஆண்டவர் நம்மிடம் இறைஞ்சுகிறார்.

இறைவனின் வார்த்தை, ஒரு குழந்தையாக வந்த இந்த நாளில், நம் பார்வையை, குழந்தைகள் பக்கம் திருப்புவோம். உலகெங்கும், குறிப்பாக, சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகளில் தொடர்ந்துவரும் போர்களின் விளைவுகளைச் சந்தித்துவரும் குழந்தைகளை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம். இக்குழந்தைகளின் முகங்கள், நல்மனம் கொண்டோர் அனைவரின் உள்ளங்களையும் தொட்டு, அவர்களுக்கு அமைதி நிறைந்த எதிர்காலத்தை உருவாக்கும் துணிவுள்ள முயற்சிகளை மேற்கொள்ள உதவட்டும்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் நிலவும் பதட்டமான நிலைகளைத் தளர்த்த இது தகுதியான காலம்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிலவிவரும் போரினாலும், தற்போதைய கொள்ளைநோயினாலும் துன்புற்றுவரும் சிரியா நாட்டு மக்களின் காயங்களை குழந்தை இயேசு குணமாக்குவராக. ஈராக் மக்களிடையிலும், குறிப்பாக, அங்கு வாழும் யாஸிதி இனத்தவரோடும் ஒப்புரவைக் கொணர்வாராக.

பெத்லகேமின் குழந்தை பிறந்த அந்த நாடு, உடன்பிறந்த நிலை என்ற கொடைக்கு சான்றாக விளங்குவதாக. இஸ்ரேல், மற்றும் பாலஸ்தீன மக்கள், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை கொண்டு, வன்முறைகளைக் களைந்து, உரையாடல் வழியே, நீடித்த அமைதிக்காக உழைக்க முன்வருவார்களாக.

கிறிஸ்மஸ் இரவில் ஒளிர்ந்த விண்மீன், லெபனான் நாட்டு மக்களுக்கு ஊக்கமும், வழிகாட்டுதலும் தருவதாக. லெபனான் மக்கள் தற்போது சந்தித்துவரும் பிரச்சனைகளால் மனம் தளர்ந்துவிடாமல் இருக்க, உலக சமுதாயத்தின் ஆதரவு அவர்களுக்குக் கிடைப்பதாக. அந்நாட்டின் தலைவர்கள் தங்கள் சொந்த நலனை புறம்தள்ளி, மக்கள் நலனை வளர்க்கும் திட்டங்களை மேற்கொள்வார்களாக.

நகோர்னோ-கரபாக் (Nagorno-Karabakh) மற்றும் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் போர் நிறுத்தம் உருவாகி, அப்பகுதிகள், உரையாடல் மற்றும் ஒப்புரவை வளர்க்கும் பாதையில் முன்னேறிச் செல்ல பன்னாட்டு உதவிகள் கிடைப்பனவாக.

புர்கினா பாசோ, மாலி, நைஜர் ஆகிய நாடுகளில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி, மற்றும், அடிப்படைவாதம் ஆகியவற்றால் மக்கள் அடைந்துவரும் துன்பங்களை, இறை குழந்தை தீர்த்துவைப்பாராக. எத்தியோப்பியாவின் மக்கள் அடைந்துவரும் துன்பங்கள் முடிவுக்கு வருவனவாக. பன்னாட்டு அடிப்படைவாத குழுக்களால் துன்புறும் காபோ டெல்காடோ (Cabo Delgado), மேற்கு மொசாம்பிக் மக்கள் ஆறுதல் பெறுவார்களாக. தென் சூடான், நைஜீரியா, காமரூன் நாடுகளின் தலைவர்கள், உரையாடலையும், உடன்பிறந்த நிலையையும் வளர்க்கும் பாதைகளில் பயணிப்பார்களாக.

கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு, ஊழல், போதைப்பொருள் வர்த்தகம் ஆகியவற்றால் கூடுதலாகத் துன்புற்றுவரும் அமெரிக்க கண்டத்தின் மக்களுக்கு, தந்தையாம் இறைவனின் நித்திய இறைவார்த்தை, நம்பிக்கையின் ஊற்றாக விளங்குவாராக. சிலே நாட்டிலும், வெனிசுவேலா நாட்டிலும் அண்மையில் உருவாகியுள்ள சமுதாய பதட்ட நிலைகள் தீர்வுக்கு வருவனவாக.

தென் கிழக்கு ஆசியாவில், குறிப்பாக, வியட்நாம், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோரை, விண்ணக வேந்தன் காப்பாராக.

ஆசியாவைக் குறித்து சிந்திக்கும்போது, ரோஹிங்கியா மக்களை என்னால் மறக்க இயலவில்லை. வறியோரில் மிக வறியோராகப் பிறந்த இயேசு, இம்மக்களுக்கு நம்பிக்கையைக் கொணர்வாராக.

அன்பு சகோதரரே, சகோதரிகளே, ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார் (எசா. 9:6). அவர் நம்மைக் காக்க வந்தார்! துன்பமும், தீமையும் இறுதியான உண்மைகள் அல்ல என்பதை அவர் நமக்குச் சொல்கிறார். வன்முறைக்கும், அநீதிக்கும் அடிபணியும்போது, கிறிஸ்மஸ் மகிழ்வையும், நம்பிக்கையையும் நாம் நிராகரிக்கிறோம்.

எதிர் சக்திகள் சூழும்போது, அவற்றால் தோல்வியடைய மறுப்பதோடு, நம்பிக்கையைக் கொணர்வதற்கும், துன்புறுவோருக்கு ஆறுதலும், உதவியும் வழங்குவதற்கும் உழைத்துவருவோரை, இந்த திருநாள் வேளையில், சிறப்பாக நினைத்துப் பார்க்கிறேன்.

இயேசு, ஒரு தொழுவத்தில் பிறந்தாலும், அவரை, அன்னை மரியாவும், புனித யோசேப்பும் அன்புடன் அரவணைத்தனர். குடும்பத்தின் அன்பை, தன் பிறப்பின் வழியே இறைமகன் புனிதமாக்கினார். இவ்வேளையில், என் எண்ணங்கள் குடும்பங்களை நோக்கி,  அதிலும் குறிப்பாக, குடும்பமாகக் கூடிவர இயலாமல், இல்லங்களில் தனித்திருப்போர் மீது திரும்புகின்றன. குடும்பம், வாழ்வுக்கும், நம்பிக்கைக்கும் தொட்டில் என்பதையும், அதுவே, அன்பு, உரையாடல், மன்னிப்பு, ஆகியவற்றின் பிறப்பிடம் என்பதையும், நாம் அனைவரும் மீண்டும் கண்டுபிடிக்க இந்த கிறிஸ்மஸ் ஒரு வாய்ப்பாக அமைவதாக.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

இவ்வாறு தன் சிறப்புச் செய்தியைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், 'ஊருக்கும், உலகிற்கும்' நிறைபெறு பலன்கள் வழங்கும் சிறப்பு ஆசீரையும் அருளினார்.

25 December 2020, 14:32