தேடுதல்

Vatican News
2019ல்  திருத்தந்தை, உரோம் நகரின் Spagna சதுக்கம் சென்றபோது ...(081220) 2019ல் திருத்தந்தை, உரோம் நகரின் Spagna சதுக்கம் சென்றபோது ...(081220)  (Vatican Media)

பாரம்பரிய முறைகளை மாற்றியமைக்கும் கோவிட்

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 8ம் தேதி, திருத்தந்தையர், உரோம் நகரின் Spagna சதுக்கம் சென்று, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தி, மக்களுக்கு ஆசீர் வழங்கும் நிகழ்வு, இவ்வாண்டு இடம்பெறாது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 8ம் தேதி கொண்டாடப்படும் புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவன்று, திருத்தந்தையர், உரோம் நகரின் Spagna சதுக்கம் சென்று, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தி, மக்களுக்கு ஆசீர் வழங்கும் நிகழ்வு, இவ்வாண்டு இடம்பெறாது என்று, திருப்பீடத் தகவல் துறை அறிவித்துள்ளது.

1953ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் இடம்பெற்றுவந்த இந்த நிகழ்வு, இவ்வாண்டின் கோவிட்-19 கொள்ளை நோய் கட்டுப்பாடுகளையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பெருமெண்ணிக்கையில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில், இந்த முடிவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துள்ளதாக கூறிய, வத்திக்கான் தகவல் தொடர்பு மையத்தின் இயக்குனர், மத்தேயோ ப்ரூனி அவர்கள், உரோம் நகரையும், உலகின் நோயுற்றோரையும், அன்னை மரியாவின் கண்காணிப்பில் ஒப்படைக்கும் நிகழ்வு, மக்கள் பங்கேற்பின்றி, மற்றோர் இடத்தில் இடம்பெறும் எனவும் கூறினார்.

அன்னை மரியாவின் அமல உற்பவம் குறித்த மறைக்கோட்பாடு, திருஅவையின் துவக்க காலத்திலிருந்தே நம்பப்பட்டு வந்தாலும், 1854ம் ஆண்டுதான் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 1857ம் ஆண்டு, உரோம் நகரின் புகழ்வாய்ந்த இஸ்பானியப் படிகளின் அருகிலுள்ள சதுக்கத்தில் உயர்ந்த தூண் ஒன்று எழுப்பப்பட்டு, அன்னை மரியாவின் திரு உருவம், அத்தூணின் மீது நிறுவப்பட்டது.

01 December 2020, 14:59