தேடுதல்

உறவுக் கரங்கள் உறவுக் கரங்கள் 

திருத்தந்தை: சமுதாய நட்புறவை ஊக்குவியுங்கள்

இந்த உலகில் துண்டு துண்டாக இடம்பெறும் மூன்றாம் உலகப் போரினால் நாம் துன்புறுகிறோம், இதுவல்ல சமுதாய நட்புறவு – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தின் ஒவ்வொரு நிலையிலும், சமுதாய நட்புறவை ஊக்குவியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா நாட்டு கத்தோலிக்கத் தலைவர்களை, டிசம்பர் 3, இவ்வியாழன் மாலையில் கேட்டுக்கொண்டார்.

அர்ஜென்டீனா தலத்திருஅவை சிறப்பித்துவரும், 23வது சமுதாய மற்றும், மேய்ப்புப்பணி அக்கறை என்ற நிகழ்வுக்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, சமுதாய நட்புறவின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உலகை நோக்கும்போது, எல்லா இடங்களிலும் போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது என்றும், துண்டு துண்டாக இடம்பெறும் மூன்றாம் உலகப் போரினால் நாம் துன்புறுகிறோம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இதுவல்ல சமுதாய நட்புறவு என்று குறிப்பிட்டுள்ளார்.

பாவமும், தன்னுணர்வின்றி செயல்படுவதும், பகைமை மற்றும், போருக்கு நம்மை இட்டுச்செல்லும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லிணக்கம், மற்றும், உடன்பிறந்த உணர்வில், சகோதரர் சகோதரிகளாக வாழ்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை மறந்துவிடுகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவர் சொல்லும் விளக்கங்களைக் கேட்கமுடியாத சூழல் நிலவும்போது, உரையாடல், தடைபடுகின்றது என்றும், அடுத்தவர் கூறுவதை உற்றுக்கேட்பதற்கு ஆவல் இல்லாத இடத்தில், சமுதாய நட்புறவு சாத்தியமில்லை என்றும், திருத்தந்தை தன் காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்தியல்கள், பேராசை ஆகிய இரண்டும், சமுதாய நட்புறவிற்கு மிகப்பெரும் எதிரிகள் என்று கூறியுள்ள திருத்தந்தை, உலகில், போர் இடம்பெறுவது ஒருபுறமிருக்க, சமுதாய நட்புறவை அழிக்கும் அடையாளங்களும் ஏராளமாக காணப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

மனிதரின் இயற்கையான இயல்பைச் சிதைக்கத் தேடும் கருத்தியல்கள் பற்றியும், அடுத்தவர் சரியான இடத்தில் அமர்வதைத் தடைசெய்வதற்கு வழிகளைத் தேடும் பேராசை பற்றியும், திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்டத்தில் பேராயர் Jorge Mario Bergoglio அவர்களாகப் பணியாற்றியபோது, 1988ம் ஆண்டில், சமுதாய நட்புறவு ஆண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2020, 14:54