தேடுதல்

Vatican News
திருவருகைக் கால தியானம் திருவருகைக் கால தியானம்  (Vatican Media)

மனிதரான இறையன்பு, நம்மை காத்திருக்க வைத்துள்ளது

இத்தாலியில், காய்ச்சல் தடுப்பூசி, கொரோனா தொற்றுக்கிருமி பரிசோதனை போன்றவற்றை பெற இயலாமல் இருக்கும், புலம்பெயர்ந்த, வீடற்ற வறியோருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சார்பாக, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

விண்ணகத்தில் நாம் எதிர்பார்க்கப்படும்போது, இவ்வுலகு குறித்த கவலைகளில் நாம் மூழ்கியிருக்கத் தேவையில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 05, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

“நமது பிறப்புக்கு சற்று முன்னர், நமது அன்புறவுகள் நம் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், அதேபோல், மனிதரான இறையன்பு, இப்போது, நம்மை, அவரது வருகைக்காக எதிர்பார்த்து காத்திருக்க வைத்துள்ளது. விண்ணகத்தில் நாம் எதிர்பார்க்கப்படும்போது, இவ்வுலகு குறித்த கவலைகளில் ஏன் நாம் சிக்கி இருக்கவேண்டும்? பகலின் ஒளி நம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது, இரவு குறித்து புகார் சொல்வதில் ஏன் நாம் நேரத்தை வீணாக்கவேண்டும்?” என்ற சொற்களை, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்திருந்தார்.

புலம்பெயர்ந்தோருக்கு காய்ச்சல் தடுப்பூசிகள்

மேலும், இத்தாலியில், காய்ச்சல் தடுப்பூசி, கொரோனா தொற்றுக்கிருமி பரிசோதனை போன்றவற்றை பெற இயலாமல் இருக்கும், புலம்பெயர்ந்த வீடற்ற வறியோருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சார்பாக, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

திருத்தந்தையின் சார்பில் தர்மச் செயல்கள் ஆற்றும் அலுவலகப் பணியாளர்கள், உரோம் நகருக்கு தெற்கே, ஏறத்தாழ 45 மைல் தூரத்தில் அமைந்துள்ள, Torvaianica எனப்படும் சிறிய கடற்கரை ஊரில் வாழ்கின்ற 35 வீடற்ற மக்களுக்கு, காய்ச்சல் தடுப்பூசி மற்றும், கொரோனா தொற்றுக்கிருமி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

Torvaianicaவில், அமலமரி பங்கு ஆலய வளாகத்தில் ஆற்றப்பட்ட இந்த உதவி குறித்து செய்தியாளர்களிடம் கூறிய, அருள்பணி Andrea Conocchia அவர்கள், புலம்பெயர்ந்த இந்த மக்கள், திருஅவையின் சார்பில், இத்தகைய உதவியைப் பெற்றுள்ளது, இதுவே முதன்முறை என்று கூறியுள்ளார்.

வத்திக்கானின் இந்த மருத்துவ உதவியைப் பெற்றுள்ள புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர், அர்ஜென்டீனா, கொலம்பியா, பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளைச் சார்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

05 December 2020, 14:05