தேடுதல்

Vatican News
திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் திருவருகைக் காலச் சிந்தனை திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் திருவருகைக் காலச் சிந்தனை  (AFP or licensors)

இயேசுவே வாரும், அன்புகூர்வதன் அவசியத்தை உணரச்செய்யும்

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம் (தி.பா.90:12)

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருவருகைக் காலத்தில், இறைவேண்டல் மற்றும், அன்புகூர்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 04, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“ஆண்டவராகிய இயேசுவே வாரும், குழம்பிய எங்கள் இதயங்களை விழிப்புடன் இருக்கச்செய்யும், செபிக்கும் ஆவலையும், அன்புகூர்வதன் தேவையும் எங்களில் உருவாக்கும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், டிசம்பர் 04, இவ்வெள்ளியன்று திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட, திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு திருவருகைக் காலச் சிந்தனைகளை வழங்கிய, கர்தினால் Raniero Cantalamessa அவர்கள், “எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம் (தி.பா.90:12)” என்ற திருப்பாடல் வரிகளை மையமாக வைத்து, சிந்தனைகளை வழங்கினார். 

மரங்களிலிருந்து இலைகள் உதிரும் இலையுதிர் காலம் போன்று நாங்கள் இருக்கிறோம் என, முதல் உலகப் போரின்போது, படைவீரர்களின் மனதில் எழுந்த உணர்வுகள் போன்று, தற்போதைய கொரோனா கொள்ளைநோயின் தாக்கத்தை அனுபவித்துவரும் மனித சமுதாயத்தின் உணர்வுகளும் உள்ளன என்று, தியானச் சிந்தனைகளைத் தொடங்கினார், கர்தினால் Cantalamessa.

மரணத்தை, சகோதரி மரணம் என்று குறிப்பிட்டு, இவ்வுலக வாழ்வின் முடிவு பற்றிய எண்ணங்களை விரிவாக எடுத்துரைத்த, கர்தினால் Cantalamessa அவர்கள், இவ்வுலக வாழ்வு மாறும், ஆனால் அது முடிவல்ல என்றும், இவ்வுலக வாழ்வு தூசியாக மாறுகையில், நமக்கு விண்ணகத்தில் நித்திய குடியிருப்பு தயாராக உள்ளது என்றும் கூறினார்.

கடவுள் விரும்பினால், அடுத்த வார திருவருகைக் காலச் சிந்தனையில், விண்ணக வாழ்வு பற்றி எடுத்துரைப்பதாகச் சொல்லி, தன் தியான உரையை நிறைவு செய்தார், கர்தினால் Cantalamessa.

அண்மையில் கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ள இவர், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, திருவருகைக் காலம், தவக்காலம் ஆகிய காலங்களில், திருத்தந்தையர் மற்றும், திருப்பீட அதிகாரிகளுக்குத் தியானச் சிந்தனைகளை வழங்கிவருவதோடு, புனித வெள்ளியன்றும் மறையுரைகளை வழங்கி வருகிறார்.

04 December 2020, 14:48