தேடுதல்

Vatican News
இந்தோனேசியாவின் புதிய தூதர்,  Laurentius Amrih Jinangkung, திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு இந்தோனேசியாவின் புதிய தூதர், Laurentius Amrih Jinangkung, திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு  (Vatican Media)

நோயாளிகளுக்கு அருகில் இருக்கும் மருத்துவர்களுக்கு நன்றி

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி: துன்புறும் மக்கள் அனைவரோடும் மிக நெருக்கமாக இருக்க, இக்காலத்தில், நாம் அழைக்கப்படுகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளை நோயால் துன்புறும் இவ்வுலகில், நோயாளிகளுக்கு மிக நெருக்கமாக இருந்து உதவும் மருத்துவர்கள், மற்றும், செவிலியர்களுடன், தான் மிக நெருக்கமாக இருக்க ஆவல் கொள்வதாக தன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"துன்புறும் மக்கள் அனைவரோடும் மிக நெருக்கமாக நாம் இருக்க அழைப்புவிடப்பட்டுள்ள இந்த கொள்ளை நோய்க்காலத்தில் நோயாளிகள் அருகே இருக்கும் மருத்துவத்துறையினருடன் நான் நெருக்கமாக இருக்க ஆவல் கொள்கிறேன். உங்கள் கனிவான கவனிப்பால், நோயாளிகள் அருகில் இருந்து ஆற்றும் மருத்துவப்பணிக்காக நன்றி கூறுகிறேன்" என்ற சொற்கள், திருத்தந்தை, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியின் அடிப்படையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "மனமாற்றம் என்பது, இறைவனிடம் நாம் வலியக் கேட்டு பெரும் ஓர் அருள். இறைவனின் அழகு, நன்மைத்தனம், மற்றும் கனிவு ஆகியவற்றை எவ்வளவு தூரம் நாம் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு தூரம் மனமாற்றம் பெறுகிறோம். இவ்வாறு, நாம் பொய்மையான, கடந்துசெல்லும் விடயங்களை விடுத்து, உண்மையான அழகான என்றுமுள்ள விடயங்களை நாடுவோம்" என்ற சொற்கள், பதிவாகியிருந்தன.

மேலும், இத்திங்கள் கிழமையன்று, திருப்பீடத்திற்கான இந்தோனேசியாவின் புதிய தூதுவர்,  Laurentius Amrih Jinangkung அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து, தன் பணி நியமன சான்றிதழ்களை சமர்ப்பித்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதே நாளில், திருப்பீடத்தின் தெய்வீக வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர், கர்தினால் இராபர்ட் சாரா, L’Osservatore Romano திருப்பீட இதழின் இயக்குனர், Andrea Monda ஆகியோரையும் திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள் சந்தித்தார்.

07 December 2020, 15:19