தேடுதல்

Vatican News
புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

நம் அயலவரை, நம்மைப்போல் எவ்வாறு அன்புகூர்வது?

நம் அயலவரை, நம்மைப்போல் அன்புகூர்வது என்பது, இப்பூமியின் நன்மைகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கின்ற முறையில், ஓர் உலகை அமைப்பதற்கு அர்ப்பணிப்பதாகும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம்மைப்போல் அயலவரை அன்புகூர்வது எவ்வாறு என்பதை விளக்கி, புலம்பெயர்ந்தோர் உலக நாளான, டிசம்பர் 18, இவ்வெள்ளியன்று, புலம்பெயர்ந்தோர் நாள் (#MigrantsDay) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“நம் அயலவரை, நம்மைப்போல் அன்புகூர்வது என்பது, இப்பூமியின் நன்மைகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கின்ற, தனிநபர்களாகவும், குடும்பங்களாகவும், அனைவரும் தங்களை வளர்த்துக்கொள்கின்ற, அனைவருக்கும் அடிப்படை உரிமைகளும் மாண்பும் உறுதிசெய்யப்படுகின்ற முறையில், ஓர் உலகை அமைப்பதற்கு அர்ப்பணிப்பதாகும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இவ்வெள்ளியன்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

“மனிதர் புலம்பெயர்வதை மீண்டும் கற்பனைசெய்து பார்க்க” என்ற தலைப்பில், இவ்வாண்டு புலம்பெயர்ந்தோர் உலக நாள், டிசம்பர் 18, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டது.

1990ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, புலம்பெயர்ந்த பணியாளர்கள் மற்றும், அவர்களின் குடும்பங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது பற்றிய, உலகளாவிய ஒப்பந்தம் குறித்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

உலகெங்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை கருத்தில் கொண்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, இரண்டாயிரமாம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி, புலம்பெயர்ந்தோர் உலக நாள், டிசம்பர் 18ம் தேதி கடைப்பிடிக்கப்படுமாறும் அறிவித்தது,

இன்று உலகில், புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 27 கோடியே பத்து இலட்சம். இவர்களில் நாடுகளுக்குள்ளே புலம்பெயர்ந்திருப்போர் ஏறத்தாழ 4 கோடியே 10 இலட்சம்.

18 December 2020, 13:39