தேடுதல்

மடகாஸ்கரில் மரம் நடும் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப் படம், 2019, செப்டம்பர் 07) மடகாஸ்கரில் மரம் நடும் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப் படம், 2019, செப்டம்பர் 07) 

2050க்குள் வத்திக்கானில் கார்பன் வெளியேற்றம் நிறுத்தப்படும்

2050ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்துவது என்பது, ஒரு கனவு அல்ல, மாறாக, அது நிறைவேற்றப்படக்கூடிய ஓர் இலக்கு - அருள்பணி Rafael García de la Serrana Villalobos

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“நம்மைப் போல் மனிதரான மீட்பரின் திருவருகைக்காக மகிழ்வுடன் எதிர்பார்த்து இருத்தல், நம் இதயங்களை, நம்பிக்கை மற்றும், மகிழ்வால் நிரப்புவதாக” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 22, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தி வழியாக இறைவேண்டல் செய்துள்ளார்.

கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிப்பதற்கு நம்மையே தயாரித்துவரும் இத்திருவருகைக் காலத்தில், திருவருகைக் காலம் (#Advent) என்ற ஹாஷ்டாக்குடன், தன் டுவிட்டர் பக்கத்தில், இச்செவ்வாயன்று இந்த இறைவேண்டலைப் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2050க்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக..

மேலும், 2050ம் ஆண்டுக்குள் வத்திக்கான் நாட்டில் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, ‘லொசர்வாத்தோரே ரொமானோ’ என்ற வத்திக்கான் நாளிதழுக்குப் பேட்டி ஒன்று அளித்துள்ளார், வத்திக்கான் நாட்டு நிர்வாகி ஒருவர்.

2050ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்துவது என்பது, ஒரு கனவு அல்ல, மாறாக, அது நிறைவேற்றப்படக்கூடிய ஓர் இலக்கு என்று கூறிய, வத்திக்கான் நாட்டின் உள்கட்டமைப்பு மேலாண்மைத் துறையின் இயக்குனர், அருள்பணி  Rafael García de la Serrana Villalobos அவர்கள், அவ்விவகாரம் தொடர்பாக, வத்திக்கான் மேற்கொண்டுவரும் திட்டங்கள் பற்றி விளக்கினார்.

பொருள்களை வீணாக்குதல், எரிசக்தி நுகர்வு உட்பட, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் அனைத்தையும், புதுப்பிக்கப்பட்ட வளங்கள் பயன்படுத்தப்படுவதன் வழியாக குறைப்பதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என்று, அருள்பணி Serrana Villalobos அவர்கள் எடுத்துரைத்தார்.

மழை நீரை சேமித்து, அதனை நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தல், எல்.இ.டி (LED) விளக்குகளைப் பயன்படுத்தி மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தல், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள், நீர் விநியோக அமைப்புகள் போன்றவற்றைக் குறைத்தல் உட்பட வத்திக்கான் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டினார், அருள்பணி Serrana Villalobos.

இயற்கை சூழலியலை வளர்த்தல் பற்றி எடுத்துரைத்த அருள்பணி Serrana Villalobos அவர்கள், வத்திக்கான் நாட்டில், இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள், பல்வேறு வகையான 300 மரங்களை நடுதல் பற்றியும், வத்திக்கான் நாட்டு தோட்டங்களுக்கு புதியமுறையில் தண்ணீர் பாய்ச்சுவதன் வழியாக, அறுபது விழுக்காட்டு தண்ணீர் வளங்களைச் சேமிக்க முடியும் என்பதையும் எடுத்துரைத்தார்.

வத்திக்கான் நாட்டில், கழிவுப்பொருள்களை தனித்தனியாகச் சேமிக்கும் நடவடிக்கை ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது என்றும், 2016ம் ஆண்டில் 42 விழுக்காடாக இருந்த இந்த சேமிப்பு, 2020ம் ஆண்டில் 65 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும், 2023ம் ஆண்டுக்குள் அதனை 75 விழுக்காடாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறிய அருள்பணி Serrana Villalobos அவர்கள், 90 விழுக்காட்டு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2020, 14:53