தேடுதல்

Vatican News
வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் மரம் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் மரம் 

இறைவேண்டல் என்பது, இருளில் மெழுகுதிரியை ஏற்றுவதாகும்

இவ்வாண்டில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஏறத்தாழ நூறு அடி உயரமுள்ள கிறிஸ்மஸ் மரம், மற்றும், வத்திக்கான் நாட்டின் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் நாற்பது சிறிய கிறிஸ்மஸ் மரங்களை, சுலோவேனிய நாடு நன்கொடையாக வழங்கியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருவருகைக் காலத்தின் மூன்றாவது வாரத்தின் இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவேண்டலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி,  இறைவேண்டல் (#Prayer) என்ற ஹாஷ்டாக்குடன், தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இறைவேண்டல் என்பது, இருளில் மெழுகுதிரியை ஏற்றுவதாகும். அது, நம்மை, முற்றிலும் வெதுவெதுப்பான வாழ்வு நிலையிலிருந்து, உன்னதமான பொருள்கள் நோக்கி நம் பார்வையைத் திருப்புகின்றது, அது, ஆண்டவரிடம் நம்மை அணுக வைக்கின்றது, கடவுள் நமக்கு நெருக்கமாக வர அனுமதிக்கிறது, நம்மை, தனிமையிலிருந்து விடுவிக்கின்றது, மற்றும், நமக்கு நம்பிக்கையை நல்குகின்றது” என்ற சொற்கள், டிசம்பர் 15, இச்செவ்வாயன்று, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியிருந்தன.

கிறிஸ்மஸ் மர அலங்காரங்கள்

மேலும், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும், கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிக்கும் மர கைவினைப் பொருள்கள், வீடற்றவர், இளம் சிறார் மற்றும், வயது வந்தோர் சிலரால் ஆக்கப்பட்டவை என்று, சுலோவேனிய நாட்டு திருப்பீடத் தூதர் Jakob Štunf அவர்கள் கூறினார்.

இவ்வாண்டில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஏறத்தாழ நூறு அடி உயரமுள்ள கிறிஸ்மஸ் மரம், மற்றும், வத்திக்கான் நாட்டின் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் நாற்பது சிறிய கிறிஸ்மஸ் மரங்கள் ஆகியவற்றை, சுலோவேனிய நாடு நன்கொடையாக வழங்கியுள்ளது. 

இந்த நன்கொடை பற்றி EWTN செய்தியிடம் பேசிய Štunf அவர்கள், இந்த மரங்களை அலங்கரிக்கும் கைவினைப் பொருள்கள், சுலோவேனிய நாட்டிலுள்ள இளம் சிறார் உட்பட, வயதுவந்தோர் சிலராலும், உரோம் நகரில் வீடின்றி வாழ்கின்ற மக்களாலும் செய்யப்பட்டவை என்றும், இவற்றைச் செய்வதற்கு நானூறு பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்றும் கூறினார்.

மத்திய ஐரோப்பாவில் ஏறத்தாழ இருபது இலட்சம் மக்கள் வாழ்கின்ற சுலோவேனிய நாடு, வத்திக்கானுக்கு அருகில் வாழ்கின்ற வீடற்ற மக்களுக்கு, இவ்வாண்டு கிறிஸ்மஸ் பெருவிழாவன்று உணவு வழங்க இசைவு தெரிவித்துள்ளது என்றும், Štunf அவர்கள் கூறினார்.

15 December 2020, 14:42