தேடுதல்

Vatican News
வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் மரம்  வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் மரம்   (ANSA)

இறைமகன் கொணர்ந்த, மாபெரும் மகிழ்வை கண்டுணர..

டிசம்பர் 11, இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, கோவிட்-19 கொள்ளைநோய் விதிமுறைகளுக்கு உட்பட்டு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடில் திறந்து வைக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் மனுஉரு எடுத்த இறைமகன் கொணர்ந்த, மாபெரும் நம்பிக்கை மற்றும், மகிழ்வை, துன்பம் நிறைந்த இக்காலக்கட்டத்தில், மீண்டும் கண்டுணர, நாம் அனைவரும் முயற்சி ஒன்றை மேற்கொள்வோம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.

டிசம்பர் 11, இவ்வெள்ளியன்று, திருவருகைக் காலம் (#Advent) என்ற ‘ஹாஷ்டாக்’குடன் தன் டுவிட்டர் பக்கத்தில் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ள திருத்தந்தை, பலர் துன்பங்களை எதிர்கொள்ளும் இந்நாள்களில், கிறிஸ்மஸ் பெருவிழாவை நோக்கிய நம் பயணத்தில், இயேசுவின் அன்னையின் துணையோடு, இறைமகன் தனது வருகையால் இவ்வுலகிற்குக் கொணர்ந்த மிகப்பெரும் நம்பிக்கை மற்றும், மகிழ்வை மீண்டும் கண்டுணர முயற்சி எடுப்போம் என்று கூறியுள்ளார்.

கிறிஸ்மஸ் குடில், மரம்,

மேலும், டிசம்பர் 11, இவ்வெள்ளி மாலை ஐந்து மணிக்கு, கோவிட்-19 கொள்ளைநோய் விதிமுறைகளுக்கு உட்பட்டு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடில் திறந்து வைக்கப்படுகின்றது.

இந்த கிறிஸ்மஸ் குடில் மற்றும், கிறிஸ்மஸ் மரம் ஆகியவை, வருகிற 2021ம் ஆண்டு சனவரி மாதம் 10ம் தேதி, நம் ஆண்டவரின் திருமுழுக்கு விழா வரை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

16ம் நூற்றாண்டிலிருந்து, வெண்களிமண் பொருள்கள் செய்வதில் புகழ்பெற்ற இத்தாலியின் Castelli நகர், இந்தக் குடிலை நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும், 28 மீட்டர் உயரமுடைய கிறிஸ்மஸ் மரத்தை, சுலோவேனியா நாட்டின் Kočevje நகர், நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஐரோப்பாவிலேயே மிக உயரமான ஊசியிலை மரம், சுலோவேனியா நாட்டின் Pohorje massif என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தின் உயரம் 61.80 மீட்டராகும். ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த மரம், மூன்று மீட்டர் மற்றும், 54 சென்டி மீட்டர் சுற்றளவையும், ஒரு மீட்டருக்கு அதிகமான விட்டத்தையும் கொண்டிருக்கிறது.

11 December 2020, 15:06