வத்திக்கான் வளாகத்தில் கிறிஸ்மஸ் மரம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அடிமைத்தனத்தின் ஒழிப்பிற்கென அர்ப்பணிக்கப்பட்ட உலக நாள் டிசம்பர் 2, இப்புதனன்று, சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
"மனிதர்களை ஒரு பொருளைப்போல் நடத்துதல், அவர்களது மாண்பை மிதித்தல் போன்ற எண்ணங்கள் பழங்காலத்தைப்போல் இன்றும் மனித இதயத்தில் வேரூன்றியுள்ளன. அடிமைத்தனம், அனைவரின் மாண்பையும் பறித்துச் செல்கின்றது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பதிவில் இடம்பெற்றிருந்தன.
அடிமைத்தனத்தை ஒழிக்கும் எண்ணத்துடன், மனித வர்க்கத்தையும், பாலியல் தொழிலையும் ஒழிப்பதற்கு, 1949ம் ஆண்டு, டிசம்பர் 2ம் தேதி, ஐ.நா. அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளான டிசம்பர் 2ம் தேதி, 1986ம் ஆண்டு முதல், அடிமைத்தனத்தின் ஒழிப்பிற்கென அர்ப்பணிக்கப்பட்ட உலக நாளாகச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
மேலும், திருப்பீடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் குழுவைச் சேர்ந்தவர்கள், டிசம்பர் 1, இச்செவ்வாயன்று, வலைத்தளம் வழியே ஒரு சந்திப்பில் ஈடுபட்டனர் என்றும், இச்சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும், வத்திக்கானில் தங்கள் உறைவிடங்களில் இருந்தவண்ணம் கலந்துகொண்டனர் என்றும், திருப்பீடத் தகவல் தொடர்பு மையம் கூறியது.
இந்த ஆலோசனைக் குழுவில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள Kinshasa பேராயர், கர்தினால் Ambongo Besungu அவர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டபின், கொள்ளைநோயையொட்டி, ஒவ்வொரு நாட்டின் தலத்திருஅவைகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன என்றும், அடுத்த கூட்டம், பிப்ரவரி மாதம் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாட்டங்களின் ஓர் அடையாளமாக, சுலோவேனியா நாட்டிலிருந்து வத்திக்கானுக்கு கொணரப்பட்ட 29 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்மஸ் மரம், நவம்பர் 30 இத்திங்களன்று புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிறுவப்பட்டது.