மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம் ஆகிய இரண்டின் சிறப்பு பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 19, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம் ஆகிய இரண்டும் எல்லாக் காலத்திலும், குறிப்பாக, துன்பம் நிறைந்த காலக்கட்டத்தில் நம்பிக்கையின் அடையாளங்கள். இந்த அடையாளத்தை நிறுத்திவிடாமல் இருப்பதில் நாம் உறுதியாயிருப்போம், அத்துடன், அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வோம், அதாவது, கடவுள், நமக்கு வெளிப்படுத்திய, இந்த உலகத்தில் அவர் ஒளிரச்செய்த தம் எல்லையற்ற நன்மைத்தனத்தை, அவை நமக்கு வெளிப்படுத்துகின்றன” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.
மேலும், டிசம்பர் 19, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் தன்னை சந்தித்த, வத்திக்கானுக்கான வட மாசிதோனியா குடியரசின் புதிய தூதர் Marija Efremova, மற்றும், கொண்டூராஸ் நாட்டு புதிய தூதர் Carlos Antonio Cordero ஆகிய இருவரிடமிருந்து பணிநியமன சான்றிதழ்களைப் பெற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.