தேடுதல்

Vatican News
திருப்பீடத்திற்கு தூதர்களாகப் பணியாற்றுவதற்குப் பொறுப்பேற்றுள்ள தூதர்கள் சடந்திப்பு திருப்பீடத்திற்கு தூதர்களாகப் பணியாற்றுவதற்குப் பொறுப்பேற்றுள்ள தூதர்கள் சடந்திப்பு  (Vatican Media)

நாடுகளின் தூதர்கள், சந்திப்பு கலாச்சாரத்தை ஊக்குவிப்பார்களாக

இந்தியா, ஜோர்டன், கஜகஸ்தான், சாம்பியா, மௌரித்தானியா, உஸ்பெகிஸ்தான், மடகாஸ்கர், எஸ்டோனியா, ருவாண்டா, டென்மார்க் ஆகிய நாடுகளின் அரசுகளால், திருப்பீடத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள தூதர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தங்கள் நாடுகளின் சார்பில் திருப்பீடத்திற்கு தூதர்களாகப் பணியாற்றுவதற்குப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள, இந்தியா உட்பட பத்து நாடுகளின் தூதர்களிடமிருந்து, டிசம்பர் 04, இவ்வெள்ளியன்று, நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று, உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரில் திருப்பீடத் தூதரகங்களைக் கொண்டிராத, இந்த நாடுகளின் தூதர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, இவர்களின் தூதரகப் பணிகள், சந்திப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் என்று தான் நம்புவதாகவும், அவர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு, திருப்பீடத்தின் பல்வேறு துறைகள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குத் தயாராக உள்ளன எனவும் தெரிவித்தார்.

பன்னாட்டு சமுதாயத்தால் பரிந்துரைக்கப்படும் இலக்குகளில், பல நேரங்களில் எதிர்கொள்ளப்படும் முரண்பாடுகள் மற்றும், பிரிவினைகளை மேற்கொண்டு, நீதி, உடன்பிறந்த உணர்வு மற்றும், ஒன்றிணைந்த உலகைக் கட்டியெழுப்புவதற்கு, ஒவ்வொரு நாளும் உழைக்குமாறும், திருத்தந்தை அத்தூதர்களைக் கேட்டுக்கொண்டார்.

முழு மனித சமுதாயமும் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் ஒரு காலக்கட்டத்தில், இத்தூதர்கள், தங்கள் பணியைத் தொடங்குகின்றனர் என்றும், கோவிட்-19 கொள்ளைநோய் பரவத்தொடங்குவதற்கு முன்னரே, 2020ம் ஆண்டு, மிகப்பெரும் மனிதாபிமானத் தேவையை எதிர்கொள்ளும் என்ற கவலை நிலவியது என்றும், திருத்தந்தை கூறினார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் போர்கள், வன்முறை மற்றும், பயங்கரவாதம், ஆகியவையே, இந்த மிகப்பெரும் மனிதாபிமான நெருக்கடிக்குக் காரணம் என்றும் உரையாற்றிய திருத்தந்தை, பொருளாதார நெருக்கடிகள், பசி மற்றும், பெருமளவில் மக்கள் புலம்பெயரக் காரணமாகியுள்ளன என்று குறிப்பிட்டார்.

இயற்கைப் பேரிடர்கள், பஞ்சம், மற்றும், வறட்சி ஆகியவற்றுக்கு, காலநிலை மாற்றம் காரணமாகியுள்ளவேளை, தற்போதைய கொள்ளைநோய், நம் சமுதாயங்களில் ஏற்கனவே நிலவும் சமத்துவமின்மைகளை கடுமையாக்கியுள்ளது என்றும், புறக்கணிக்கப்படல், மறக்கப்படல், ஒதுக்கப்படல் ஆகிய ஆபத்துக்களை, வறியோரும், நலிந்தோரும்,, எதிர்கொள்கின்கறனர் என்றும் திருத்தந்தை கூறினார்.    

நம் பூமிக்கோளமும், இளைய தலைமுறைகளின் வருங்காலமும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைக் களைவதற்கு, நேர்மை மற்றும், மதிப்புடன்கூடிய உரையாடலும் ஒத்துழைப்பும், நம் உலகிற்கு, எப்போதையும்விட இப்போது அதிகம் தேவைப்படுகின்றது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பத்து நாடுகளின் தூதர்களிடம் கூறினார்.

உரோம் நகரில் திருப்பீடத் தூதரகங்களைக் கொண்டிராத, இந்தியா, ஜோர்டன், கஜகஸ்தான், சாம்பியா, மௌரித்தானியா, உஸ்பெகிஸ்தான், மடகாஸ்கர், எஸ்டோனியா, ருவாண்டா, டென்மார்க் ஆகிய நாடுகளின் அரசுகளால், திருப்பீடத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள தூதர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரையாற்றினார்.

04 December 2020, 14:39