தேடுதல்

மூவேளை செபவுரையின்போது - 131220 மூவேளை செபவுரையின்போது - 131220 

இறைவன் நம் அருகில் வரும்போது, நம் மகிழ்ச்சி அதிகரிக்கும்

எதிலும் நம்மை மையப்படுத்தாமல், இயேசுவையே நம் மையமாகக் கொண்டு செயல்படவேண்டும் என புனித திருமுழுக்கு யோவான் நமக்கு சொல்லித்தரும் பாடம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மிக நெருங்கிய ஒரு நண்பருக்காக பல காலம் காத்திருந்து, அவரைக் காணும்வேளையில் கிடைக்கும் மகிழ்ச்சியை ஒத்தது, இத்திருவருகைக் கால காத்திருப்பு அனுபவம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 13ம்தேதி, இஞ்ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்ச்சிகொள்வதற்கு அழைப்பைத் தருவது, திருவருகைக்காலத்தின் பண்புகளில் ஒன்று என்றும், இறைவன் நம் அருகில் வரும்போது, நம் மகிழ்வு அதிகரிக்கும் என்றும் கூறினார்.

மெசியாவுக்காக காத்திருப்பதில் கிட்டும் அனுபவத்தின் மகிழ்வை, அன்னை மரியா, மற்றும், யோசேப்புக்குப்பின், முழுமையாகப் பெற்ற புனித திருமுழுக்கு யோவான் குறித்து இஞ்ஞாயிறு நற்செய்தி எடுத்துரைத்ததைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களிடையே அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த புனித திருமுழுக்கு யோவான், அப்புகழை, தனக்கென பயன்படுத்திக்கொள்ளாமல், தனக்குப்பின் வரவிருப்பவரின் மிதியடிவாரை அவிழ்க்க தான் தகுதியற்றவன் என கூறி காத்திருந்தார் என்றார்.

எதிலும் நம்மை மையப்படுத்தாமல், இயேசுவையே நம் மையமாகக் கொண்டு செயல்படவேண்டும் என்பது, புனித திருமுழுக்கு யோவான் நமக்கு சொல்லித்தரும் பாடம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நமக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் செயல்படுவது என்பது, நம்மைத் தனிமைப்படுத்துவதைக் குறிக்கவில்லை, மாறாக, இயேசுவை நம் மையமாகக்கொண்டு, அவரின் ஒளியில் மற்றவர்களின் நலனை நாடுவதிலும், பிறரை அன்புகூர்வதிலும், நம்மையே நாம் முழுமையாகக் கண்டுகொள்வதைக் குறிக்கிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளம் வயதிலேயே இவ்வுலக சுகங்களை இழந்து, இறைவனை பின்பற்றுவதில் தன்னையே கையளித்து, இறைவனுக்கு சான்று பகர்ந்த புனித திருமுழுக்கு யோவானின் வாழ்வு, நற்செய்தியை அறிவிக்கும் அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது, என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியை அறிவிப்போர் ஒவ்வொருவரும், உலக இன்பங்களிலிருந்து விடுபட்டவர்களாக, மக்களை, தங்களை நோக்கி இழுக்காமல், இறைவனை நோக்கி திருப்பி விடுவதே, அவர்களின் பணியாக உள்ளது என்று எடுத்துரைத்தார்.

மகிழ்ச்சி குறித்து நாம் இன்று செவிமடுத்தவை அனைத்தும், அன்னை மரியாவில் நிறைவேறியது, ஏனெனில், அவர் இறைவனின் மீட்பளிக்கும் வார்த்தையாம் இயேசுவுக்காக காத்திருந்து, அவரை தன்னில் வரவேற்று, கருவில் தாங்கி, கடவுளுக்கு நெருக்கமானவராக இருந்தார், அதனாலேயே, அவரை திரு அவை, 'நம் மகிழ்வின்  காரணம்' என அழைக்கிறது, எனக்கூறி, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை  பிரான்சிஸ்.

13 December 2020, 12:51