தேடுதல்

Vatican News
பேராசிரியர் Giuseppe Dalla Torre பேராசிரியர் Giuseppe Dalla Torre   (@VaticanMedia)

Giuseppe Dalla Torre அவர்கள், மதிப்புமிக்க கலாச்சார மனிதர்

1997ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை வத்திக்கான் நாட்டு நீதிமன்றத்தின் தலைவராகப் பணியாற்றிய Giuseppe Dalla Torre அவர்கள், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளில் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் புகழ்பெற்ற கல்வியாளரும், நீதிபதியுமான, Giuseppe Dalla Torre del Tempio di Sanguinetto அவர்கள், டிசம்பர் 3, இவ்வியாழனன்று இறைபதம் சேர்ந்ததையொட்டி, அவரது ஆன்மா நிறையமைதி அடையச் செபிப்பதாகவும், அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு தனது ஆன்மீக அருகாமையைத் தெரிவிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Dalla Torre குடும்பத்தினருக்கு அனுப்பிய இரங்கல் தந்தியில், Giuseppe Dalla Torre அவர்கள், சிறந்த நீதிபதி, மதிப்புமிக்க கலாச்சார மனிதர், திருப்பீடத்திற்கு பிரமாணிக்கத்துடன் ஒத்துழைத்தவர் என்று பாராட்டப்பட்டுள்ளார்.

Giuseppe Dalla Torre அவர்கள், வத்திக்கான் நீதி மன்றத்தின் தலைவராகவும், உரோம் நகரில் அமைந்துள்ள விண்ணேற்பு அன்னை மரியா பல்கலைக்கழகத்தின் (LUMSA) தலைவராகவும், புகழ்பெற்ற பேராசிரியராகவும், சிறப்புப் பணியாற்றியவர் என்று, அத்தந்தியில் கூறப்பட்டுள்ளது.

1997ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை வத்திக்கான் நாட்டு நீதிமன்றத்தின் தலைவராகப் பணியாற்றிய Torre அவர்கள், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளில் ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

77 வயது நிறைந்த பேராசிரியர் Giuseppe Dalla Torre அவர்கள், கொரோனா தொற்றுக்கிருமியோடு தொடர்புடைய பிரச்சனையால் தாக்கப்பட்டு, டிசம்பர் 3, இவ்வியாழனன்று இறைபதம் சேர்ந்தார்.

டிசம்பர் 5, இச்சனிக்கிழமையன்று, Giuseppe Dalla Torre அவர்களின் அடக்கச்சடங்குத் திருப்பலியை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் நிறைவேற்றினார்.

05 December 2020, 14:24