தேடுதல்

Vatican News
கொள்ளை நோய் காரணமாக கரையை அடைய முடியாமல் தவிக்கும் கப்பல்கள் கொள்ளை நோய் காரணமாக கரையை அடைய முடியாமல் தவிக்கும் கப்பல்கள்   (AFP or licensors)

கிறிஸ்மஸ் காட்சிகள், நம் விசுவாசத்திற்கு உதவும் மறைக்கல்வி

திருத்தந்தை: கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் காரணமாக, கரையிறங்கமுடியாமல் கடலிலேயே வாழும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள கடல் பணியாளர்களுக்காக இறைவேண்டல் செய்வோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடல் தொழிலாளர்கள் பலர், இன்றைய கோவிட்-19 கொள்ளைநோய்க் கட்டுப்பாடுகள் காரணமாக, தங்கள் குடும்பங்களை சந்திக்கமுடியாமல், கப்பல்களிலேயே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் காரணமாக கரையிறங்கமுடியாமல் கடலிலேயே வாழும் நிலைக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள கடல் பணியாளர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு, தன் நண்பகல் மூவேளை செபவுரையின் இறுதியில் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று, உலகம் முழுவதும், கடல்களில், 4 இலட்சம் கடல் பணியாளர்கள், தரையிறங்க முடியாமல் துன்புறுவதாகவும், இவர்களின் பணி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லையெனினும், சொந்த இடம் திரும்ப, கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் அனுமதியளிக்கவில்லை என்றார்.

துன்ப நிலைகளை அனுபவிக்கும் இந்த கடல்பயணிகளுக்காக அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவதாகவும், இப்பணியாளர்களின் துயர் துடைக்க, அரசுகள் தங்களால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு நம்மை ஆன்மீக வழியில் தயாரித்துவரும் வேளையில், உதவி தேவைப்படும் நம் அயலவரில் இயேசுவைக் கண்டுகொண்டு, அவர்களுடனான ஒருமைப்பாட்டில், அவர்களுக்கு உதவிசெய்வதன் வழியே, நம்மை தயாரிப்போம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தின் பெருந்தூண்களுக்கிடையே அமைக்கப்பட்டிருக்கும் 100 கிறிஸ்து பிறப்பு காட்சிகள் குறித்தும், மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலையின் வடிவில் விவரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்து பிறப்பு விளக்கங்கள், நம் விசுவாசத்திற்கு உதவும் மறைக்கல்வி எனவும் குறிப்பிட்டார்.

21 December 2020, 15:10