தேடுதல்

Vatican News
மூவேளை செப உரையின்போது  061220 மூவேளை செப உரையின்போது 061220  (Vatican Media)

கிறிஸ்து பிறப்பின் ஒளியை, கொள்ளைநோய் மறைத்துவிட முடியாது

கொள்ளைநோயால் துன்பங்களை அனுபவித்துவரும் இன்றய உலகில், நாம் வீடுகளில் அமைக்கும் கிறிஸ்மஸ் மரங்களும், குடிலும், நம்பிக்கையின் அடையாளங்களாக உள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தக் கொள்ளைநோய்க் காலத்திலும் உலகில், கிறிஸ்து பிறப்பை நோக்கிய தயாரிப்புகள் சிறப்பான விதத்தில் இடம்பெறுவது குறித்து தன் மகிழ்சியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  எந்தக் கொள்ளைநோயாலும், கிறிஸ்து பிறப்பின் ஒளியை அணைத்துவிடமுடியாது என தெரிவித்தார்.

இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்தக் கருத்துக்களை, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையில் வழங்கியபின், இந்நாட்களின் கிறிஸ்மஸ் தயாரிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பேதுரு வளாகத்தில், கிறிஸ்மஸ் மரம் நடப்பட்டு உள்ளதையும், விரைவில் கிறிஸ்மஸ் குடில் திறக்கப்பட உள்ளதையும் பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல வீடுகளில், இத்தகைய அடையாளங்களை அமைத்து வருவது, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொணரும் தருணமாக உள்ளது என்றார்.

கொள்ளைநோயால் துன்பங்களை அனுபவித்துவரும் இன்றய உலகில், நாம் வீடுகளில் அமைக்கும் கிறிஸ்மஸ் மரங்களும், குடிலும், நம்பிக்கையின் அடையாளங்களாக உள்ளன, என உரைத்த திருத்தந்தை, இந்த அடையாளங்களின் வெளி அர்த்தத்தையும் தாண்டிச்சென்று நாம், இவைகளின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இறைஅன்பை முற்றிலுமாக புரிந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

எந்த ஒரு கொள்ளைநோயோ, அல்லது, நெருக்கடியோ, கிறிஸ்து பிறப்பின் ஒளியை மறைத்து விடமுடியாது, ஆகவே, அந்த ஒளி நம் இதயங்களுக்குள் புகவும், உதவித்தேவைப்படுவோரை அணுகவும் அனுமதிப்போமாக, என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் மீண்டும் நமக்குள்ளும், நம் நடுவிலும் பிறப்பெடுக்க உள்ளார் என மேலும் கூறினார். 

06 December 2020, 13:12