தேடுதல்

Vatican News
APSA திருப்பீடத்தின் அசையா சொத்துக்கள் மேலாண்மை அமைப்பு APSA திருப்பீடத்தின் அசையா சொத்துக்கள் மேலாண்மை அமைப்பு 

திருப்பீடத்தின் நிதி மேலாண்மை பற்றிய புதிய சட்டம்

திருப்பீடத்தின் நிதி மேலாண்மை பற்றிய புதிய சட்டம், திருப்பீடத் துறைகளில் பணியாற்றும் பொருளாதார நிர்வாகிகளின் எண்ணிக்கையையும், திருப்பீடச் செயலகத்தின் நிர்வாக அலுவலகத்தின் செயல்பாடுகளையும் குறைக்கும் - திருப்பீட தகவல் தொடர்பகம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத்தின் பொருளாதார நடவடிக்கைகளை மேலாண்மை செய்வது மற்றும், கண்காணிப்பது குறித்த விவகாரங்களை சீர்படுத்தும் நோக்கத்தில், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் Motu Proprio என்ற அறிக்கையின் வழியாக புதிய சட்டம் ஒன்றை, டிசம்பர் 28, இத்திங்களன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக அளவில் கத்தோலிக்கரிடமிருந்து திருப்பீடத்திற்கு நேரிடையாக வழங்கப்படும் புனித பேதுருவின் காசு எனப்படும் நிதி, விசுவாசிகள் வழங்கும் நன்கொடைகள் உட்பட திருப்பீடத்தின் நிதி சார்ந்த விவகாரங்கள் மீது கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும், அவற்றில் ஒளிவுமறைவற்ற தன்மையை உருவாக்கவும் என, “சிறந்ததோர் அமைப்பை” உருவாக்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“சிறந்ததோர் அமைப்பு” என்ற தலைப்பில் திருத்தந்தை வெளியிட்டுள்ள Motu Proprio அறிக்கை பற்றி செய்தியாளர்களுக்கு அறிவித்த, திருப்பீட தகவல் தொடர்பகம், இவ்விவகாரம் தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய மடலில் குறிப்பிட்டுள்ளவைகளை, அவர் தற்போதைய அறிக்கையின் வழியாக சட்டமாக்கியுள்ளார் என்று கூறியது. 

திருப்பீடத்தின் தலைமையகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் சீர்திருத்தத்தின் ஒரு முக்கிய படியாக, இப்புதிய சட்டம் அமைந்துள்ளது என்றும், வருகிற சனவரி 11ம் தேதி, திருப்பீடத்தின் 2021ம் ஆண்டின் வரவு செலவு பட்டியலை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, திருத்தந்தை, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது கவனிக்கத்தக்கது என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது.

திருப்பீட செயலகத்தின் பொருளாதார மற்றும், நிதி சார்ந்த நடவடிக்கைகள், APSA எனப்படும் திருப்பீடத்தின் அசையா சொத்துக்கள் மேலாண்மை அமைப்பிடம் மாற்றப்படுவது தொடர்பாக, திருத்தந்தை உருவாக்கிய குழு, கடந்த பல வாரங்களாக பணியாற்றியது என்றும், அது தொடர்ந்து பிப்ரவரி 14ம் தேதி வரை பணியாற்றி, மேலும் சில விவரங்களை அறிவிக்கும் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது.

இப்புதிய சட்டம், திருப்பீடத் துறைகளில் பணியாற்றும் பொருளாதார நிர்வாகிகளின் எண்ணிக்கையையும், திருப்பீடச் செயலகத்தின் நிர்வாக அலுவலகத்தின் செயல்பாடுகளையும் குறைக்கும் என்றும், நிர்வாகம், மேலாண்மை, பொருளாதாரம் மற்றும், நிதி சார்ந்த தீர்மானங்கள் மேற்கொள்வதில் கவனம் செலுத்த உதவும் என்றும், திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது.

29 December 2020, 15:09