தேடுதல்

Vatican News
Taize குழுமத்தின் வழிகாட்டி சகோதரர் Alois திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தல் - கோப்புப் படம் 2018 Taize குழுமத்தின் வழிகாட்டி சகோதரர் Alois திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தல் - கோப்புப் படம் 2018 

Taizé குழுமத்தின் 43வது ஐரோப்பிய ஆண்டு கூட்டம்

உயிர்த்த கிறிஸ்து நமக்கு வழங்கியுள்ள நம்பிக்கையை மழுங்கவைக்கும், ஏமாற்றம், நம்பிக்கையின்மை போன்ற கருத்துக்களை பரப்பாமல் இருப்பதில், ஒவ்வோர் இளையோரும் கவனமுடன் செயல்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கணனி வலைத்தொடர்புகள் வழியாக இடம்பெறும்,  Taizé குழுமத்தின் 43வது ஐரோப்பிய ஆண்டு கூட்டத்திற்கு, தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின், தூரின் நகரில் இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த Taizé கிறிஸ்தவ குழுமத்தின் 43வது ஐரோப்பிய ஆண்டு கூட்டம், கொரோனா தொற்றுநோய் காரணமாக இடம்பெற முடியாமல், கணனி வலைத்தொடர்பு வழியாக இம்மாதம் 27ந்தேதி முதல் ஜனவரி முதல் தேதி வரை இடம்பெற்று வருவதை முன்னிட்டு, திருத்தந்தையின் வாழ்த்துக்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் கையெழுத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.

ஐரோப்பியக் கூட்டம் என திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போதைய மெய்நிகர் கூட்டத்தில், உலகம் முழுவதும் இருந்து இளையோர் பங்குகொண்டு ஒன்றிணைந்து செபிப்பதன் வழியாக, ஒருவருக்கொருவர் உதவி வருவதை இச்செய்தியில் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அண்மையில் தான் வெளியிட்ட 'Fratelli Tutti' என்ற திருத்தூது மடல்,  குறித்து அச்செய்தியில் குறிப்பிடும் திருத்தந்தை, எவரும் தங்கள் வாழ்வில் தனிமையில் வாடக்கூடாது என்பதை நாம் உறுதி செய்யவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.

உயிர்த்த கிறிஸ்து நமக்கு வழங்கியுள்ள நம்பிக்கையை மழுங்கவைக்கும், ஏமாற்றம், நம்பிக்கையின்மை போன்ற கருத்துக்களை பரப்பாமல் இருப்பதில் ஒவ்வோர் இளையோரும் கவனமுடன் செயல்படவேண்டும் எனவும் திருத்தந்தையின் செய்தி அழைப்பு விடுகிறது.

ஒவ்வொருவரும் நம்பிக்கையால் நிரப்பப் பெற்றவர்களாக, இத்துன்பகரமான காலத்தில் துயர்களை அனுபவிக்கும் மக்களுக்கு உதவுபவர்களாக செயல்படுவோம் என்ற அழைப்பையும் தன் செய்தியில் விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த நிலை, மற்றும், சந்திப்பின் கலாச்சாரத்தை உருவாக்கி, நம்பிக்கையின் விடியல் நோக்கி நடைபோடுவோம் என்ற அழைப்புடன், தன் வாழ்த்துச்செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

28 December 2020, 15:06