திருத்தந்தை - நம்பிக்கையின் செயல்பாடாக, கல்வி விளங்குகிறது
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
"நிகழ்காலத்திலிருந்து, எதிர்காலத்தை நோக்கும் நம்பிக்கையின் செயல்பாடாக, கல்வி எப்போதும் விளங்குகிறது" என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் இளைஞர் கூட்டத்திற்கு காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
Mission 4.7 என்ற அமைப்பும், உலகளாவிய கல்வி ஒப்பந்தம் என்ற அமைப்பும் இணைந்து, டிசம்பர் 16, 17 ஆகிய இரு நாள்கள், வத்திக்கானில் நடத்தும் மெய்நிகர் வழி இளைஞர் கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
நாம் வாழும் காலத்தில், உலகமயமாக்கப்பட்டுள்ள அக்கறையற்ற மனநிலைக்கும், தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கும் சவால் விடுக்கும் வண்ணம் புதிய வகை கல்வி அமையவேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
கோவிட்-19, கல்வியில் உருவாக்கியுள்ள பாதிப்பு
இக்கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், கோவிட்-19 கொள்ளைநோய், 2020ம் ஆண்டில் உருவாக்கியுள்ள பாதிப்புக்களைக் குறிப்பிட்டுள்ள வேளையில், இந்தப் பாதிப்புக்களில், குழந்தைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நீண்ட காலம் நீடிக்கும் பாதிப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
உலகெங்கும், 100 கோடிக்கும் அதிகமான குழந்தைகளின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களில் பல கோடி குழந்தைகளின் எதிர்காலம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் நிகழ்ந்துள்ள மாற்றங்களால் மிகப்பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கும் வளர்ந்துவரும் வெறுப்பு, பிரிவு, அறியாமை என்ற அலைகளுக்கு எதிராக, நீதியிலும், அன்பிலும் உருவாகும் ஒரு சமுதாயத்தை கல்வியால் உருவாக்கமுடியும் என்பதை, உலகளாவிய கல்வி ஒப்பந்தம் என்ற அமைப்பு, இவ்வாண்டு அக்டோபர் மாதம் வலியுறுத்தியதை, திருத்தந்தை தன் செய்தியில் மீண்டும் நினைவுகூர்ந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பங்கு
உலக அரசுகள் புதுவகை கல்வியை இளைய தலைமுறையினருக்கு வழங்குவதற்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனம் பெரும் உதவி செய்யமுடியும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
"உலக மக்களுக்கு அமைதியின் மேன்மையை சொல்லித்தருகிறீர்கள். இத்தகையக் கல்வியை உலக மக்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த பள்ளி, ஐக்கிய நாடுகள் நிறுவனம்" என்று, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1965ம் ஆண்டு, ஐ.நா.வின் தலைமையகத்தில் ஆற்றிய உரையிலிருந்து, திருத்தந்தை, மேற்கோள் ஒன்றை, தன் செய்தியில் இணைத்துள்ளார்.
2030ம் ஆண்டுக்குள் உலகெங்கும் நடைமுறைப்படுத்தக்கூடிய நீடித்திருக்கக்கூடிய முன்னேற்ற இலக்குகள் குறித்து இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இலக்குகளில், கல்விக்கு மிக முக்கிய இடம் வழங்கப்படவேண்டும் என்பதை மீண்டும் நினைவுறுத்தியுள்ளார்.
முதியோரை மறக்கவேண்டாம்
மனித குடும்பத்தின் மிக உன்னதமான விழுமியங்களைத் தாங்கி நிற்கும் முதியோரையும், தாத்தா, பாட்டிகளையும் இளைஞர்கள் மறந்துவிடக்கூடாது என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.