தேடுதல்

Vatican News
வத்திக்கான் பணியாளர்களை திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் பணியாளர்களை திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

கிறிஸ்து பிறப்பை, கண்டுகொள்தல், தியானித்தல், பறைசாற்றுதல்

இயேசு பிறப்புத் தொடர்புடைய நிகழ்வுகளை, அன்னை மரியா, தன் மனதிலிறுத்தி தியானித்தது, நமக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்மஸ்  மகிழ்ச்சியை நோக்கிச் செல்லும் நாம், நற்செய்தி அறிவிப்பு, மற்றும், மனிதகுல முன்னேற்றத்தில் திருஅவை மேற்கொள்ளும் பணிகள் வீரியமுடையதாக இருக்கும் வண்ணம், வத்திக்கான் பணியாளர்கள் உதவவேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை வத்திக்கான் பணியாளர்களுடன் பரிமாறிக்கொள்ளும் பாரம்பரிய நிகழ்வையொட்டி, டிசம்பர் 21, இத்திங்கள் நண்பகலில் அனைத்துப் பணியாளர்களையும், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீண்டும் கண்டுகொள்தல், தியானித்தல், பறைசாற்றுதல் என்ற மூன்று தலைப்புகளில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

வரலாற்றின் மிக உன்னத நிகழ்வாக, மனுமகனின் பிறப்பை மீண்டும் நாம் கண்டுகொள்வது முக்கியத்துவம் நிறைந்தது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பிறப்பிற்கு பல காலத்திற்கு முன்னரே இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வை, நாம் மீண்டும் கண்டுகொள்ளவேண்டியது அவசியமாகிறது என உரைத்தார்.

இறைவன் மனுவுரு எடுத்ததை தியானிப்பது குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசு பிறப்புத் தொடர்புடைய நிகழ்வுகளை, அன்னை மரியா, தன் மனதிலிறுத்தி தியானித்தது, நமக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளது என்று கூறினார்.

கடவுளின் நன்மைத்தனத்தை குழந்தை இயேசுவில் கண்டுகொள்ள நம் தியானம் உதவுகிறது என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் அன்புகூரப்படுபவராக,  நன்மைத்தனம் நிறைந்தவராக, தாழ்ச்சியுடையவராக குழந்தை இயேசுவில் தன்னை வெளிப்படுத்தியுள்ளது, நம்மை மீட்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது என மேலும் கூறினார்.

நம் அனைவரையும் வானுலகிற்கு அழைத்துச் செல்வதற்கென வானிலிருந்து மண்ணுலகம் இறங்கிவந்த மனுமகனைக் குறித்து அதிகம் அதிகமாக சிந்திக்க வேண்டிய காலமிது என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள் (லூக்கா 2:20), என நாம் நற்செய்தியில் வாசிப்பது, நற்செய்தியை நாம் எடுத்துரைக்க வேண்டிய நம் கடமையை வலியுறுத்துவதாக உள்ளது என்றார் திருத்தந்தை.

கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்வு, கடந்துசெல்லும், ஆனால், அது குறித்த நினைவுகள் அனைத்தும் நம் வாழ்வு நடவடிக்கைகளில் நிலைத்திருக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, கிறிஸ்து பிறப்பு குறித்து கண்டவை கேட்டவை அனைத்தையும் எடுத்துரைக்கவேண்டிய நம் கடமையையும் எடுத்தியம்பினார்.

இயேசுவே நம் மீட்பர் என்பதை, நம் வார்த்தைகளாலும், நடவடிக்கைகளாலும், நம் விசுவாசம், மற்றும், அன்பிலிருந்து பிறக்கும் மகிழ்வினாலும் எடுத்துரைப்போம்  என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்முடைய சிரமங்களும், துயர்களும், கிறிஸ்து பிறப்பின் ஒளியை தடை செய்யாதிருக்கட்டும், என மேலும் கூறினார்.

21 December 2020, 15:15