தேடுதல்

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடில் 

தூய்மைமிக்க கிறிஸ்மஸ் கொண்டாட திருத்தந்தை அழைப்பு

முதல் கிறிஸ்மஸ் நாளன்று அன்னை மரியா, யோசேப்பு மற்றும் குழந்தை இயேசு ஆகியோர் மலர் கொத்துக்களையும், அலங்காரங்களையும் கொண்டு இந்நாளைக் கொண்டாடவில்லை - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கிருமியினால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகள், முதல் கிறிஸ்மஸ் நாளன்று அன்னை மரியா, யோசேப்பு மற்றும் குழந்தை இயேசு ஆகியோர் சந்தித்த பல்வேறு தடைகளை நமக்கு நினைவுறுத்துகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 16 இப்புதனன்று கூறினார்.

தன் நூலகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பின் வழியே, புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை, அந்த உரையின் இறுதியில், இத்தாலி நாட்டில் அடுத்துவரும் நாள்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிருப்பதை நினைவுகூர்ந்து, இவ்வாறு கூறினார்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை வழக்கம்போல் சிறப்பிக்க முடியாதவண்ணம், அடுத்துவரும் நாள்களில், அரசின் பல தடை உத்தரவுகள் வரவிருக்கின்றன என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வேளையில், முதல் கிறிஸ்மஸ் நாளன்று அன்னை மரியா, யோசேப்பு மற்றும் குழந்தை இயேசு ஆகியோர் மலர் கொத்துக்களையும், அலங்காரங்களையும் கொண்டு இந்நாளைக் கொண்டாடவில்லை என்பதை நினைவுகூருவோம் என்று கூறினார்.

கடினமான அச்சூழலில், அன்னை மரியாவையும் புனித யோசேப்பையும், நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பு வழிநடத்தியதைப் போல, நம்மையும், இந்த கடினமான நாள்களில் இந்த அருள்வரங்கள் நம்மையும் வழிநடத்த வேண்டும் என்று திருத்தந்தை வேண்டிக்கொண்டார்.

இவ்வுலகம் சந்திக்கும் கடினமானச் சூழல், நமது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை, வியாபார உலகம் காட்டும் நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை செய்து, இன்னும் தூய்மைமிக்க ஒரு கொண்டாட்டமாக மாற்றுவதாக என்ற வேண்டுதலுடன் திருத்தந்தை தன் உரையை நிறைவுசெய்தார்.

16 December 2020, 14:54