தேடுதல்

Vatican News
புனித யோசேப்பு புனித யோசேப்பு  

“புனித யோசேப்பு ஆண்டு”: 8 டிசம்பர் 2020-08 டிசம்பர் 2021

திருத்தந்தை அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள், 1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி புனித யோசேப்பு அவர்களை, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித யோசேப்பு, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 08, இச்செவ்வாயன்று, “Patris corde” அதாவது, “ஒரு தந்தையின் இதயத்தோடு” என்ற தலைப்பில் திருத்தூது மடல் ஒன்றை வெளியிட்டு, புனித யோசேப்பு யூபிலி ஆண்டு ஒன்றையும் அறிவித்துள்ளார்.

தனது தலைமைப்பணிக் காலத்தின் எட்டாவது ஆண்டில், இந்த யூபிலி ஆண்டை வெளியிடுவதாக அம்மடலின் இறுதியில் கையெழுத்திட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு டிசம்பர் 08, இச்செவ்வாயன்று துவங்கும் புனித யோசேப்பு யூபிலி ஆண்டு, 2021ம் ஆண்டு டிசம்பர் 08ம் தேதி நிறைவடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புள்ள தந்தை, கனிவு நிறைந்த தந்தை, பணிவுள்ள தந்தை, ஏற்றுக்கொள்ளும் தந்தை, படைப்புத்திற துணிவுள்ள தந்தை, உழைக்கும் தந்தை, நிழல்போன்ற ஆகிய ஏழு தலைப்புக்களில், புனித யோசேப்பு பற்றி விளக்கியுள்ள திருத்தந்தை, நம் மனமாற்றத்திற்காக, புனித யோசேப்பிடம் மன்றாடுவோம் என்ற ஒரு சிறிய செபத்துடன் இந்த மடலை நிறைவு செய்துள்ளார்.

இயேசுவின் வளர்ப்புத் தந்தைக்கென, சிறப்பான ஓர் ஆண்டை அர்ப்பணித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கோவிட்-19 கொள்ளைநோய், சாதாரண மக்கள் மற்றும், சமுதாயத்தின் பார்வையிலிருந்து புறக்கணிக்கப்பட்ட மக்களின் முக்கியத்துவத்தை  உணரச்செய்துள்ளதோடு, ஒவ்வொரு நாளும் பொறுமை, நம்பிக்கை மற்றும், பொறுப்புணர்வு ஆகியவற்றைச் செயல்படுத்தவும் நம்மைத் தூண்டுகிறது என்று கூறியுள்ளார்.

புனித யோசேப்பு, பொது மக்களால் அதிகம் கவனிக்கப்படாத, அதேநேரம் காலமறிந்து செயல்படும் மறைவான வாழ்வு வாழ்ந்தவர், ஆயினும், அவர் மீட்பு வரலாற்றில் எதனாலும் ஒப்பிடப்படமுடியாத செயலாளராக இருந்தார் என்று கூறியுள்ள திருத்தந்தை, இதனாலேயே, இந்த புனிதர் கிறிஸ்தவர்களால் எப்போதும் அதிகம் அன்புகூரப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தையர்கள், பிறக்கும்போதே அவ்வாறு பிறப்பதில்லை, அவர்கள் ஒரு குழந்தையின் வாழ்வு மீது பொறுப்பேற்கும்போது தந்தையராக மாறுகின்றனர் என்றும், இன்றைய சமுதாயத்தில் சிறார், பலநேரங்களில் தந்தையர்களால் கைவிடப்பட்ட அநாதைகளாக இருப்பது கவலை தருகின்றது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இந்நிலையிலுள்ள இன்றைய உலகிற்கு, புனித யோசேப்பு சிறந்த எடுத்துக்காட்டான மனிதராக உள்ளார் என்றும், இன்றைய உலகிற்கு, முதலாளிகள் அல்ல, தந்தையர்களே தேவைப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

19ம் நூற்றாண்டில், இயேசு மற்றும், மரியா துறவு சபை, ப்ரெஞ்சு மொழியில் வெளியிட்ட புனித யோசப்பு பக்திமுயற்சிகள் என்ற நூலிலுள்ள செபத்தை, ஒவ்வொரு நாளும் தான் சொல்வதாக, "Patris corde" என்ற திருத்தூது மடலில், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

புனித யோசேப்பு யூபிலி ஆண்டில், சிறப்பு நிறைபேறு பலன்களை அறிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோசேப்பே, ஒரு தந்தையாக வாழும் வாழ்வுப் பாதையை எமக்குக் காட்டியருளும், இரக்கமும், துணிவும் நிறைந்த அருளை எமக்குப் பெற்றுத்தாரும் என்று செபித்து, இந்த மடலை நிறைவுசெய்துள்ளார். 

திருத்தந்தை அருளாளர் ஒன்பதாம் பயஸ் அவர்கள், 1870ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வெளியிட்ட, கடவுளின் அதே வழியில் எனப் பொருள்படும், Quemadmodum Deus என்ற ஆணையின் வழியாக, புனித யோசேப்பு அவர்களை, உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார். அந்த அறிவிப்பின் 150ம் ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 08, இச்செவ்வாயன்று, புனித யோசேப்பு ஆண்டை அறிவித்துள்ளார்.

08 December 2020, 15:06