தேடுதல்

Vatican News
மூவேளை செபவுரையின்போது - 271220 மூவேளை செபவுரையின்போது - 271220  (ANSA)

திருக்குடும்பத்தின் முக்கிய அடையாளமாக மகிழ்வு உள்ளது

திருத்தந்தை : உறவுகளுக்கு புத்துயிர் கொடுக்கும் அன்பால் கட்டப்படுவதுடன், நம்பிக்கையின் விடியலைத் திறப்பவைகளாகவும், குடும்பங்கள் இருக்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவைப்படுவதைப்போல், இறைமகனுக்கும், ஒரு குடும்பத்தின் அன்பும் அரவணைப்பும் தேவைப்பட்டது என்பதையே நாம் சிறப்பிக்கும் திருக்குடும்ப விழா நினைவுறுத்துகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட திருக்குடும்ப விழா குறித்து தன்  ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் அனைத்துக் குடும்பங்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவும், தூண்டுதலாகவும், யோசேப்பு, மரியா மற்றும் இயேசுவின் திருக்குடும்பம் விளங்குகிறது, என உரைத்தார்.

கோவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, வத்திக்கானிலுள்ள தன்  நூலகத்திலிருந்து  நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் கனிவான அன்பை, அன்னைமரியாவின் தாய்மைக்குரிய அன்பிலும், யோசேப்பின் அக்கறையிலும் அனுபவித்த குழந்தை இயேசுவுக்கும், திருக்குடும்பத்திற்கும் முக்கிய அடையாளமாக மகிழ்வு உள்ளது, என்று கூறினார்.

குடும்பங்கள் நம் ஒவ்வொருவருக்கும் கற்பித்துவருபவை குறித்து நாம் மீண்டும் கண்டுகொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உறவுகளுக்கு புத்துயிர் கொடுக்கும் அன்பால் கட்டப்படுவதுடன், நம்பிக்கையின் விடியலைத் திறப்பவைகளாகவும் குடும்பங்கள் இருக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இறைவேண்டல், அன்பு, மன்னிப்பு, கரிசனை, இறைவிருப்பத்திற்கு பணிந்து நடத்தல் போன்றவை இடம்பெறும்போது, கடவுள் வழங்கும் மகிழ்வுக்கு தன்னைத் திறந்ததாக அது செயல்படும் என உரைத்தார் திருத்தந்தை.

மகிழ்வு நிறைந்த குடும்பங்கள், வெளி உலகிற்கு தங்களைத் திறந்தவர்களாக, சகோதரர் சகோதரிகளின் சேவைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக, தங்கள் தினசரி வாழ்வு எடுத்துக்காட்டு வழியாக செயல்பட்டு, சிறப்பான, புதியதோர் உலகை கட்டியெழுப்ப தேவையான ஆன்மீக பலத்தைக் கண்டுகொள்கின்றனர், எனவும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

28 December 2020, 15:16