தேடுதல்

'இறைவேண்டலின் திருத்தூதுப்பணி' யின் 175ம் ஆண்டு நிறைவையொட்டிய சந்தி்பபு 28062019 'இறைவேண்டலின் திருத்தூதுப்பணி' யின் 175ம் ஆண்டு நிறைவையொட்டிய சந்தி்பபு 28062019 

'இறைவேண்டல் திருத்தூதுப்பணி' வத்திக்கான் அறக்கட்டளையாக...

இயேசு சபையினரால் நடத்தப்பட்டுவரும் 'இறைவேண்டலின் திருத்தூதுப்பணி' என்ற இயக்கத்தை, 'திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலைத்தொடர்பு அறக்கட்டளை' என்ற ஓர் அங்கமாக, திருத்தந்தை உருவாக்கியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

175 ஆண்டுகளுக்கும் மேலாக, இயேசு சபையினரால் உலகெங்கும் நடத்தப்பட்டுவரும் 'இறைவேண்டலின் திருத்தூதுப்பணி' என்ற இயக்கத்தை, 'திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலைத்தொடர்பு அறக்கட்டளை' என்ற பெயருடன், வத்திக்கான் நகர் அரசின் அதிகாரப்பூர்வமான ஓர் அங்கமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ளார்.

'இறைவேண்டல் வலைத்தொடர்பு அறக்கட்டளை'

2020ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி, திருத்தந்தை உருவாக்கிய இந்த அறக்கட்டளையைக் குறித்த ஆணை, டிசம்பர் 3, இவ்வியாழன், இயேசு சபை புனிதர் பிரான்சிஸ் சேவியர் திருநாளன்று வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய இந்த அறக்கட்டளையின் முதல் இயக்குனராக, இயேசு சபை அருள்பணியாளர் Frederic Fornos அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த இயேசு சபை அருள்பணியாளர் Francis Xavier Gautrelet அவர்களால், 1844ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, உருவாக்கப்பட்ட இறைவேண்டலின் திருத்தூதுப் பணி அமைப்பிற்கு, இன்னும் கூடுதலான உலகளாவிய ஒரு பண்பை வழங்கும் நோக்கத்துடன், இதை, ஒரு பாப்பிறை பணியாக மாற்றி, 'திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலைத்தொடர்பு அறக்கட்டளை' என்ற பெயர் வழங்கப்படுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த ஆணையில் கூறியுள்ளார்.

2020ம் ஆண்டு, நவம்பர் 17ம் தேதி, புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவிலில் வழங்கப்பட்ட இந்த ஆணையின்படி நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளை, 2020ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி முதல் செயல்பட துவங்கும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இறைவேண்டலின் திருத்தூதுப் பணி அமைப்பு

1844ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் இயேசு சபை அருள்பணியாளர் Francis Xavier Gautrelet அவர்களால் உருவாக்கப்பட்ட இறைவேண்டலின் திருத்தூதுப் பணி அமைப்பு, இவ்வாண்டு டிசம்பர் 3ம் தேதி, இவ்வியாழனன்று, தன் 176வது ஆண்டை நிறைவு செய்கின்றது.

2019ம் ஆண்டு, இவ்வமைப்பு, ஜூன் 28 இவ்வெள்ளி, ஜூன் 29 இச்சனி ஆகிய இரு நாள்கள், உரோம் நகரில், தன் 175வது ஆண்டைச் சிறப்பித்த வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பில் பணியாற்றும் 6000த்திற்கும் அதிகமானோரை, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றினார்.

1915ம் ஆண்டு முதல், இந்த அமைப்பில், திருநற்கருணை வீரர்கள் என்ற இளையோரின் பிரிவு இணைக்கப்பட்டதும், திருத்தந்தையர் 13ம் லியோ, மற்றும் 11ம் பயஸ் ஆகியோரின் விருப்பத்திற்கேற்ப, திருத்தந்தையரின் மாத இறைவேண்டல் கருத்துக்கள் வெளியாகிவருவதும் குறிப்பிடத்தக்கன.

இறைவேண்டலின் திருத்தூதுப் பணி அமைப்பில், இன்று உலகெங்கும் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் உறுப்பினர்கள் பணியாற்றுகின்றனர் என்பதும், இவ்வமைப்பு, அண்மைய ஆண்டுகளில், 'The Pope Video' மற்றும், 'Click to Pray' முயற்சிகளின் வழியே இளையோரை அதிகமாக ஈடுபடுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன.

03 December 2020, 17:03