தேடுதல்

Vatican News
அருள்பணியாளரான Jorge Mario Bergoglio, இயேசு சபையின் உலகத்தலைவர் அருள்பணி பேத்ரோ அருப்பேயுடன்... அருள்பணியாளரான Jorge Mario Bergoglio, இயேசு சபையின் உலகத்தலைவர் அருள்பணி பேத்ரோ அருப்பேயுடன்... 

அருள்பணியாளராக 51 ஆண்டுகளை கடந்துள்ள திருத்தந்தை

17 வயது இளைஞனாக இருந்தபோது, 1953ம் ஆண்டு, புனித மத்தேயு விழாவான செப்டம்பர் 21ம் தேதியன்று, தான் தேவ அழைத்தலை உணர்ந்ததாக உரைக்கும் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

1969ம் ஆண்டு, இயேசு சபையில் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நிகழ்வின் 51ம் ஆண்டு நிறைவை, டிசம்பர், 13ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பித்தார்.

1936ம் ஆண்டு, டிசம்பர் 17ம் தேதி பிறந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 33வது பிறந்தநாளுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் 1969ம் ஆண்டு, டிசமபர் 13ம் தேதி, இயேசு சபை அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

தனது 17வது வயதில், தான் திருப்பலிகளில் கலந்துகொள்ளும் ஆர்ஜென்டினாவின் புவனஸ் அயிரெஸ் பங்குக்கோவிலை 1953ம் ஆண்டு, புனித மத்தேயு விழாவான செப்டமபர் 21ம் தேதி கடந்து சென்றபோது, திடீரென, ஒப்புரவு அருள்சாதனத்தை பெறவிரும்பி, கோவிலுக்குள் நுழைந்த்தாகவும், அன்று, தன் தேவ அழைத்தலை உணர்ந்த்தாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

தனக்கு அறிமுகமில்லாத ஓர் அருள்பணியாளர், ஒப்புரவு அருள்சாதனப்பெட்டியில் அன்று தனக்காக காத்திருந்ததாகவும், அந்நேரத்தில் ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறவேண்டும் என தனக்கு ஏன் தோன்றியது என்றோ, யாரோ தனக்காக காத்திருக்கிறார்கள் என்ற உணர்வு தனக்கு ஏன் தோன்றியது என்றோ காரணம் தனக்கு புரியவில்லை எனினும், அந்த நாள், தன் வாழ்வை முற்றிலும் மாற்றியமைத்தது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு, அதாவது 2013ம் ஆண்டு, மே மாதம் 18ம் தேதி, பெந்தகொஸ்தே திருவிழிப்பின்போது கூறினார்.

1936ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி அர்ஜென்டினாவின் புவனஸ் அயிரெஸ் நகரில் பிறந்த Jorge Mario Bergoglio அவர்கள், வேதியியலில் பட்டம்பெற்று, 1958ம் ஆண்டு இயேசு சபையில் இணைந்தார். 1969ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, இயேசு சபை அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1973ம் ஆண்டு முதல் 1979 வரை அர்ஜென்டினாவில் இயேசு சபை மறைமாநிலத் தலைவராக பணியாற்றியபின், 1998ம் ஆண்டு முதல் புவனஸ் அயிரெஸ் பேராயராக பணியாற்றியபோது, 2001ம் ஆண்டு, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

2013ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், பதவி விலகியதைத் தொடர்ந்து, அதே ஆண்டு மார்ச் 13ம் தேதி திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 13ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று தன் அருள்பணித்துவ வாழ்வின் 51ம் ஆண்டை நிறைவு செய்தார்.

14 December 2020, 15:03