தேடுதல்

Vatican News
கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகள் கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் மரம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகள்  (Vatican Media)

துன்புறும் உலகிற்கு கடவுள் வழங்கும் அடையாளம்

இயேசுவே நம் அமைதி, நம் மகிழ்வு மற்றும், நம் ஆறுதல் என்பதை, கிறிஸ்மஸ் பெருவிழா நமக்கு நினைவுறுத்துகின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்படும் கிறிஸ்மஸ் குடில் மற்றும், கிறிஸ்மஸ் மரம் ஆகியவற்றைப் பார்ப்பதற்கு உரோம் மாநகருக்கு வர வாய்ப்புப் பெறும் திருப்பயணிகள் மற்றும், உரோம், மாநகர மக்களுக்கு, அவை, எக்காலத்தையும்விட, இக்காலத்தில், நம்பிக்கையின் அடையாளங்களாக உள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இந்த கிறிஸ்மஸ் குடில் மற்றும், கிறிஸ்மஸ் மரம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியுள்ள இத்தாலி மற்றும், சுலோவேனியா நாடுகளின் ஏறத்தாழ ஐம்பது பிரதிநிதிகளை, டிசம்பர் 11, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களுக்கும், கிறிஸ்மஸ் குடிலையும், கிறிஸ்மஸ் மரத்தையும் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் அமைப்பதற்குப் பணியாற்றிய அனைவருக்கும் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

இயேசுவே நம் அமைதி, நம் மகிழ்வு மற்றும், நம் ஆறுதல் என்பதை, கிறிஸ்மஸ் பெருவிழா நமக்கு நினைவுறுத்துகின்றது என்றும், கிறிஸ்மஸ் குடிலில் வைக்கப்படும் உருவங்கள் போன்று, நாமும், சிறியோராக, வறியோராக மற்றும், தாழ்ச்சியுள்ளோராக மாறவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

பெருந்தொற்றுநோய் உருவாக்கியுள்ள துன்பங்களை, இந்த கிறிஸ்மஸ் காலத்தில், மக்கள் எதிர்கொள்வது பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, இத்துன்பங்கள் மத்தியில், கடவுள் இவ்வுலகிற்கு வழங்கும் அடையாளம் இயேசு (காண்க. லூக். 2:12) என்று கூறினார்.

கிறிஸ்மஸ் குடில், நற்செய்தி கூறும் ஏழ்மையை எடுத்துரைக்கின்றது என்றும், அது, திருக்குடும்பம் மற்றும், அக்குடிலில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு மனிதர்கள் மற்றும், விலங்குகள் பற்றி தியானிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சுலோவேனிய நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் உட்பட அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைக் கூறி, தன் ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

11 December 2020, 14:58