தேடுதல்

குவாதலூப்பே அன்னை மரியா திருநாள் திருப்பலி குவாதலூப்பே அன்னை மரியா திருநாள் திருப்பலி 

நம் வாழ்வை ஒரு கொடையாக மாற்ற அருள்வேண்டுவோம்

கடவுள் எப்போதும் தம்மை, நிறைந்து ததும்பி வழிந்தே வழங்குகிறார் என்றும், கடவுள் இருக்கும் இடத்தில் நிறைந்துவழிதல் இருக்கும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

குவாதலூப்பே அன்னை மரியாவின் திருநாளான, டிசம்பர் 12, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், குறைவான எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்ற திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமையேற்று நிறைவேற்றி, இலத்தீன் அமெரிக்காவிற்காகச் செபித்தார்.

அமெரிக்கக் கண்டத்தின் பாதுகாவலரான குவாதலூப்பே அன்னை மரியாவுக்கு முடிசூட்டப்பட்ட நிகழ்வின் 125வது ஆண்டு நிறைவு, இச்சனிக்கிழமையன்று கொண்டாடப்பட்டவேளையில், ஆயர்கள் பேராயத் தலைவரும், இலத்தீன் அமெரிக்க அவையின் தலைவருமான கர்தினால் Marc Ouellet, ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்களும் கலந்துகொண்ட கூட்டுத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரை வழங்கினார்.

நிறைந்துவழிதல், ஆசீர், கொடை ஆகிய மூன்று சொற்களை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, குவாதலூப்பே அன்னை மரியாவை உற்றுநோக்கும்போது, இந்த மூன்று கூறுகளும் முழுமையாய் பிரதிபலிப்பதை நாம் காணமுடிகின்றது என்று கூறினார்.

கடவுள் எப்போதும், நிறைந்து ததும்பி வழிந்தவண்ணம் தன்னை வழங்குகிறார் என்றும், கடவுள் இருக்கும் இடத்தில் நிறைந்துவழிதல் இருக்கும் என்றும் கூறியத் திருத்தந்தை,  கிறிஸ்து பிறப்பு பேருண்மை பற்றிச் சிந்திக்கையில், இந்த உண்மையை நாம் அறிந்துகொள்கிறோம் என்று கூறினார்.

ஆசீர் என்பது பற்றி நாம் தியானிக்கும்போது, மரியா, எலிசபெத்தம்மாளைச் சந்தித்தது ஓர் ஆசீர்வாதம் என்றும், ஆசீர் என்று சொல்லும்போது, நன்மை உண்டாகுக என்று சொல்வதாகும் என்றும் உரைத்த திருத்தந்தை, கடவுள் அபரிவிதமாக வழங்குவது ஒரு கொடை என்று கூறினார்.

குவாதலூப்பே அன்னை மரியாவின் திருவுருவத்தை இன்று தியானிக்கும் நாம், மனத்தாராளம், நிறைந்துவழிதல், நன்றாக இரு என வாழ்த்துதல், ஒருபோதும் யாரையும் பழித்துரைக்காதிருத்தல் போன்ற அருள்வரங்களை கடவுளிடம் வேண்டுவோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வைக் ஒரு கொடையாக மாற்றவும் மன்றாடுவோம் என்று கூறி, தன் மறையுரையை நிறைவுசெய்தார்.

மெக்சிகோவின் குவாதலூப்பே என்ற ஊரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த எளிய விவசாயி, யுவான் தியேகோ என்பவர், கத்தோலிக்க மறையைத் தழுவியதைத் தொடர்ந்து, அவருக்கு அன்னை மரியா தோன்றினார் என்பதும், 1531ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி, ரோசா மலர்கள் பூக்க இயலாத காலத்தில் யுவான் தியேகோ அம்மலர்களைத் திரட்டி ஆயரிடம் சமர்ப்பித்ததன் வழியே, அன்னையின் புதுமையை ஆயர் உணர்ந்தார் என்பதும், இத்திருநாளின் பின்னணியாக அமைந்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2020, 15:01