தேடுதல்

இறைவேண்டல் நம் வாழ்வாக மாறவேண்டும் – செபக் கருத்து

திருஅவையின் மறைப்பணிக்கு இதயமாக அமைவது செபம். விண்ணகத் தந்தையோடு நாம் உரையாடலில் நுழைய செபம் ஒரு முக்கிய திறவுகோல்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் இதயங்களையும், நம்மைச் சுற்றியுள்ள எதார்த்தங்களையும் மாற்றும் வலிமை, இறைவேண்டலுக்கு உண்டு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டிசம்பர் மாத இறைவேண்டல் கருத்தில் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலைத்தளப் பணியை ஒருங்கிணைக்கும் இயேசுசபை பணிக்குழு, டிசம்பர் 1, இச்செவ்வாய் மாலை வெளியிட்ட காணொளியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவேண்டல் நம் வாழ்வாக மாறவேண்டும் என்பதை, தன் டிசம்பர் மாத கருத்தாகக் கூறியுள்ளார்.

1 நிமிடம் 30 நொடிகள் நீடிக்கும் இந்த காணொளியில், இவ்வாண்டு, மார்ச் 27ம் தேதி, வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் யாருமில்லாத புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடத்திய Urbi et Orbi சிறப்பு வழிபாட்டில், அவர், ஆழ்ந்த இறைவேண்டல் புரிந்த நேரம் பதிவாகியுள்ளது.

அதே வண்ணம், மருத்தவமனையில், நோயுற்ற குழந்தைக்கருகே ஒரு தாய் செபிக்கும் காட்சியும், வெவ்வேறு நாடுகளில் பல்வேறு வயதினர் தனித்து செபிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இந்தக் காட்சிகள் தோன்றும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்பானிய மொழியில், கூறியுள்ள கருத்துக்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:

“திருஅவையின் மறைப்பணிக்கு இதயமாக அமைவது செபம். விண்ணகத் தந்தையோடு நாம் உரையாடலில் நுழைய செபம் ஒரு முக்கிய திறவுகோல். நற்செய்தியிலிருந்து ஒரு சிறு பகுதியை வாசிக்கும் ஒவ்வொரு நேரத்திலும், இயேசு நம்முடன் பேசுவதை நாம் கேட்கலாம். அவருடன் நாம் பேசுவதும், அவருக்குச் செவிமடுப்பதும், இறைவேண்டலாகும். செபத்தின் வழியே நாம், நம் இதயங்களையும், நம்மைச் சுற்றியுள்ள எதார்த்தங்களையும் மாற்றுகிறோம். இயேசு கிறிஸ்துவோடு நாம் கொள்ளும் தனிப்பட்ட உறவு, இறை வார்த்தையாலும், இறைவேண்டல் வாழ்வாலும் ஊட்டம் பெறுகிறது.”

இந்தக் காணொளித் தொகுப்பின் இறுதியில், திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலைத்தளப் பணி அமைப்பு தன் 175ம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்த வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ள உலகப் பிரதிநிதிகள் 5000த்திற்கும் அதிகமானோரை, 2019ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி, திருத்தந்தை புனித பவுல் அரங்கத்தில் சந்தித்த நிகழ்வின் முடிவில், கூடியிருந்த அனைவரையும் ஒரு நிமிடம் அமைதியான இறைவேண்டலில் திருத்தந்தை வழிநடத்திய காட்சி பதிவாகியுள்ளது.

02 December 2020, 15:08