தேடுதல்

Vatican News
தன் நூலகத்திலிருந்து ஆசீர் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் நூலகத்திலிருந்து ஆசீர் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

திருத்தந்தையின் கிறிஸ்மஸ் செய்திகள், நேரடி ஒளிபரப்பில்

இத்தாலிய அரசு விதித்துள்ள தடைகளை கருத்தில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி வழங்கும் அனைத்து செய்திகளும், நேரடி ஒளிபரப்பின் வழியே வெளியிடப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயின் பரவலைத் தடுக்க, இத்தாலிய அரசு விதித்துள்ள தடைகளை கருத்தில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி வழங்கும் அனைத்து செய்திகளும், நேரடி ஒளிபரப்பின் வழியே வெளியிடப்படும் என்று, வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 25ம் தேதி, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று திருத்தந்தை வழங்கும் “Urbi et Orbi” சிறப்புச் செய்தியும், நிறைபெறுபலன் ஆசீரும், வத்திக்கான் இல்லத்தின் ஆசீரின் அரங்கத்திலிருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவண்ணம், டிசம்பர் 26, புனித ஸ்தேவான் திருநாள், டிசம்பர் 27, திருக்குடும்பத் திருவிழா ஞாயிறு, மற்றும், சனவரி 1, மரியா, இறைவனின் அன்னை பெருவிழா, சனவரி 3, ஞாயிறு, சனவரி 6, திருக்காட்சிப் பெருவிழா ஆகிய அனைத்து திருநாள்களையும் ஒட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மூவேளை செப உரைகளை, வத்திக்கான் இல்லத்தின் நூலகத்திலிருந்து, நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்குவார் என்று, வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

டிசம்பர் 24 இரவு திருப்பலி, டிசம்பர் 31, மாலை நன்றி வழிபாடு, சனவரி 1 மற்றும் சனவரி 6 ஆகிய பெருவிழாக்களின் திருப்பலிகள் ஆகிய அனைத்தையும், புனித பேதுரு பெருங்கோவிலில், குறைந்த அளவு மக்களின் பங்கேற்புடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றுவார்.

இதற்கிடையே, வத்திக்கான் உயர் அதிகாரிகள் இருவர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, Zenit கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாளரான கர்தினால் Konrad Krajewski, மற்றும் வத்திக்கான் நகர ஆளுநரான கர்தினால் Giuseppe Bertello ஆகிய இருவரும் இந்த பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று, இச்செய்தி கூறியுள்ளது.

23 December 2020, 14:26