தேடுதல்

மறைக்கல்வியுரையின்போது - 021220 மறைக்கல்வியுரையின்போது - 021220 

மறைக்கல்வியுரை - இறையாசீரின் முக்கியத்துவம்

திருத்தந்தை : பாவத்தின் காரணமாக நாம் இறைவனை விட்டு தூர விலகிச் சென்றாலும், அவர் நமக்கு நன்மை தருபவைகளையே தொடர்ந்து ஆவல் கொள்கிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களின் நலன் கருதி, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் மக்களை சந்திப்பதை தவிர்த்து,  தன் நூலக அறையிலிருந்து விசுவாசிகளுக்கு புதன் மறைக்கல்வியுரையை, இணையதளம் வழியாக, இம்மாதம் முதல் புதனிலிருந்து மீண்டும் வழங்கி வருகிறார், என்பது நாம் அறிந்ததே. பல  வாரங்களாக 'இறைவேண்டல்' குறித்த ஒரு தொடரை தன் புதன் மறைக்கல்வி உரைகளில் வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், ‘இறையாசீர்’ என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். முதலில், புனித பவுல் எபேசியருக்கு எழுதிய முதல் பிரிவிலிருந்து ஒரு பகுதி (எபே.1,3-6) பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட, திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார். இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம்.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரரே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த மறைக்கல்வித் தொடரில் இன்று, இறைவேண்டலின் அடிப்படைக் கூறாக இருக்கும் இறையாசீரின் முக்கியத்துவம் குறித்து சிந்திப்போம். ஆசீர் என்பதற்கு நேரடி அர்த்தம் என்னவென்று பார்த்தோமானால், அது, நல்லவைகளை எடுத்துரைப்பதை குறித்து நிற்கின்றது. உலகை படைத்து, நிலைநிறுத்திப் பேணிக்காப்பதில், இறைவன், நன்மைத்தனம் மிக்க ஒரு வார்த்தையைப் பேசுகிறார். அவர் படைப்பை ஆசீர்வதிக்கிறார், மற்றும், அனைத்தையும் நல்லதெனக் காண்கிறார். பாவத்தின் காரணமாக நாம் அவரைவிட்டு தூர விலகிச் சென்றாலும், அவர் நமக்கு நன்மை தருபவைகளையே தொடர்ந்து ஆவல் கொள்கிறார். மீட்பு வரலாற்றில், இறைவன் நமக்கு வழங்கிய கொடைகளில் மிகப்பெரியது, இயேசு கிறிஸ்துவை நமக்கு வழங்கியதாகும். இயேசு கிறிஸ்துவின் வழியாக, நம்மை, தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொண்ட, தந்தையாம் இறைவனைப் போற்றி, அவர் புகழ் பாடுமாறு நமக்கு அழைப்புவிடுக்கிறார் புனித பவுல் (எபே.1:3-6). இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஆசீர்களுக்கு பதில்மொழி வழங்கும் விதமாக, நம் புகழ்பாடல், ஆராதனை, மற்றும், நன்றியுரைப்பு செபம் வழியாக, நன்மைத்தனங்களின் இறைவனைப் போற்றிப் புகழ்கின்றோம். 'இரையாசீரின் செபம் என்பது, இறைவனின் கொடைகளுக்கு, மனிதரின் பதில்மொழியாகும்'(எண்.2626), என திருஅவையின் மறைக்கல்வி போதிக்கின்றது. தன் மகனையே நமக்கு வழங்கியதன் வழியாக, தன் முடிவற்ற நன்மைத்தனத்தினை நமக்கு வெளிப்படுத்திய தந்தையாம் இறைவனுக்கு நன்றிப் புகழ் பாடுவதில் எப்போதும் மகிழ்வைக் கண்டு கொள்வோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த திருவருவருகைக் காலப் பயணத்தில் இயேசுவின் ஒளி நம் பாதைகளை ஒளிர்வித்து, நம் இதயங்களில் உள்ள அனைத்து அச்சங்களையும் இருளையும் நீக்குவதாக, என வாழ்த்தினார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2020, 12:25