தேடுதல்

Vatican News
மூவேளை செப உரை 261220 மூவேளை செப உரை 261220  (Vatican Media)

அன்புச் செயல்கள் வரலாற்றை மாற்றுகின்றன

தவறான ஒன்றைப் பார்க்கும்போது அதைப்பற்றி குறைகூறாமல், முறையீடு செய்யாமல், புறங்கூறாமல், தவறு இழைத்தவருக்காகவும், அத்தகைய இன்னலான சூழல் அகலவும் நாம் செபிக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தாழ்ச்சி நிறைந்த துணிவோடு இறைவேண்டல் செய்கின்ற, அன்புகூர்கின்ற மற்றும், மன்னிக்கின்ற மக்கள் வழியாக, கடவுள் வரலாற்றை வழிநடத்துகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 26, இச்சனிக்கிழமையன்று கூறினார்.

திருஅவையின் முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் விழாவாகிய, டிசம்பர் 26, இச்சனிக்கிழமை பகல் 12 மணிக்கு, வத்திக்கானின் நூலக அறையிலிருந்து, நேரடி ஒளிபரப்பின் வழியே, மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஸ்தேவானின் சான்று வாழ்வை மையப்படுத்தி, தன் சிந்தனைகளை வழங்கினார்.

இருளில் சுடர்விடுபவர் புனித ஸ்தேவான்

“உலகிற்கு வந்த உண்மையான ஒளியாகிய இயேசு, இருளில் ஒளிர்ந்த ஒளி, இருள் அவர்மேல் வெற்றி கொள்ளவில்லை” (யோவா.1:9,5) என்று, கிறிஸ்மஸ் பெருவிழா நற்செய்தியில் வாசிக்க கேட்டோம், இன்று, ஒளியாம் இயேசுவுக்குச் சான்று பகர்ந்த  மனிதராகிய புனித ஸ்தேவான் பற்றி சிந்திக்கிறோம், இவர் இருளில் சுடர்விடுகின்றவர் என்று, தன் மூவேளை செப உரையைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித ஸ்தேவான், பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு, மிகக் கொடூரமாய்க் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார், அவர், தன்னைக் கொலைசெய்தவர்களுக்காக கடவுளிடம் மன்றாடினார் மற்றும், அவர்களை மன்னித்தார். இவ்வாறு, அவர், வெறுப்பென்ற இருளில், இயேசுவின் ஒளி ஒளிரச்செய்தார் என்றுரைத்தார், திருத்தந்தை.

வன்முறை மற்றும், பொய்களுக்கு இணங்காமல், தீமைக்கு நன்மையால் பதிலளித்து, இருளில் ஒளியை இன்றும் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கும் சகோதரர், சகோதரிகளில், முதல் மறைசாட்சியாக, அல்லது, சான்றாக, அவர் விளங்குகிறார் என்று கூறினார் திருத்தந்தை.

சான்றுகளால் விளையும் நன்மை

உலகின் இரவுகளில் கடவுளின் விடியலைக் கொணரும் இவர்கள் அனைவரும் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவதன் வழியாக, சான்றுகளாக மாறினார்கள் என்று விளக்கிக்கூறியத் திருத்தந்தை, தீமைகளால் மலிந்திருக்கும் இந்த உலகத்திற்கு, நன்மையைக் கொணரும் இவர்களின் சான்றுகள், உண்மையிலேயே தேவைதானா என்ற கேள்வி எழலாம் என்று கூறி, அதற்கும் பதில் அளித்தார்.

புனித ஸ்தேவான் இறைவனிடம் மன்றாடி, மன்னித்த மனிதர்களுள், சவுல் எனும் இளைஞரும் ஒருவர் (தி.ப.7,58) மற்றும், அவரைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார் (தி.ப.8:1) என்று, இன்றைய திருவழிபாட்டில் வாசிக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் திருவருளால், சவுல், பின்னாளில் பவுலாக மனம் மாறி, வரலாற்றில் மிகப்பெரும் மறைப்பணியாளரானார் என்று கூறினார்.

கடவுளின் திருவருளால், அதேநேரம், புனித ஸ்தேவானின் மன்னிப்பால், பவுல் பிறந்தார் என்றும், அவரின் மனமாற்றத்திற்கு அதுவே வித்து என்றும், நம் அன்புச் செயல்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சிறியதாய், மறைவாக இருந்தாலும்கூட, அவை வரலாற்றை மாற்றுகின்றன என்றும், திருத்தந்தை, தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.

வாழும் சூழல்களில் சான்று

ஒவ்வொரு நாளும் நாம் ஆற்றுகின்ற சாதாரண செயல்கள் வழியாக, நம் வாழ்வை மிகச் சிறந்த படைப்பாக மாற்றவேண்டும் என கடவுள் விரும்புகிறார் என்றும், நாம் வாழ்கின்ற இடங்களில், குடும்பங்களில், பணியில், ஒரு சிறிய புன்னகையின் ஒளியை வழங்குவதன் வழியாக, புறணிபேசும் சூழலிலிருந்து விலகுவதன் வழியாக, இயேசுவுக்குச் சான்றுபகர நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், திருத்தந்தை கூறினார்.

தவறான ஒன்றைப் பார்க்கும்போது அதைப்பற்றி குறைகூறாமல், முறையீடு செய்யாமல், புறங்கூறாமல், தவறு இழைத்தவருக்காகவும், அத்தகைய இன்னலான சூழல் அகலவும் நாம் செபிக்கவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, நம் குடும்பங்களில் விவாதங்கள் தொடங்கும்போது, அவற்றின்மீது வெற்றிகொள்வதற்கு முயற்சிக்காமல், அவற்றின் வேகத்தைத் தணிப்பதற்கும் நம்மைப் புண்படுத்தியவர்களை மன்னிப்பதற்கும்   முயற்சிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“பேரீச்சை மரம் போல் இருங்கள், அவர்கள் அதன் மீது கல்லெறிகிறார்கள், ஆனால் அது பழங்களைக் கொட்டிக்கொண்டே இருக்கின்றன” என்ற பழமொழிக்கேற்ப, நாமும், ஒவ்வொரு நேரமும், தீமையை நன்மையால் வெல்லலாம் என்றும், இயேசுவின் பெயரால் சித்ரவதைகளை எதிர்கொள்ளும் அனைவருக்காகவும் செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டு, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

26 December 2020, 12:30