தேடுதல்

Vatican News
கிறிஸ்மஸ் இசைக்குழு கலைஞர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் கிறிஸ்மஸ் இசைக்குழு கலைஞர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

கலைஞர்கள் நம் உலகில் அழகின் பாதுகாவலர்கள்

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் துன்பங்களை அனுபவிக்கும் மக்களை நினைவில்கொண்டு, அவர்களுக்காக இறைவனை மன்றாடுவதற்கு, கிறிஸ்மஸ் விளக்குகள் அழைப்பு விடுக்கின்றன - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உண்மை மற்றும், அழகை வெளிக்கொணர்வதில், தூய்மை மற்றும், பேரார்வத்துடன் பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ள கலைஞர்கள், தங்களது பணியின் வழியாக, மனித இதயங்களில் மகிழ்வை ஏற்படுத்துகின்றனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று கூறினார்.

டிசம்பர் 12, இச்சனிக்கிழமை காலையில், கிறிஸ்மஸ் இசைக்குழு கலைஞர்களை, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கலைஞர்கள், நம் உலகில் அழகின் பாதுகாவலர்களாக உள்ளனர் என்றும்,  இவர்கள், தங்களது கலைப்பணியால், தலைமுறைகளை ஒன்றிணைத்து, அவர்கள் மத்தியில் வியப்புணர்வு பகிர்ந்துகொள்ளப்பட உதவுகின்றனர் என்றும் பாராட்டினார்.

எப்பொழுதும் போல, இன்றும், கிறிஸ்மஸ் குடிலின் எளிமையில், அழகு நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றது, இந்த அழகை, நம்பிக்கை நிறைந்த இதயங்களோடு கொண்டாடுவோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் துன்பங்களை அனுபவிக்கும் மக்களை நினைவில்கொண்டு, அவர்களுக்காக இறைவனை மன்றாடுவதற்கு, கிறிஸ்மஸ் விளக்குகள் அழைப்பு விடுக்கின்றன என்று கூறினார்.

மூன்று இயக்கங்கள்

நம் வரலாற்றின் இக்கட்டான இத்தருணத்தில், கலை, மற்றும், அதன் பங்கு பற்றிய சில சிந்தனைகளை, கலைஞர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலைஞர்களின் படைப்பாற்றலை மூன்று இயக்கங்களில் குறிப்பிடலாம் என்றுரைத்தார்.

முதலாவது, வியப்பு மற்றும், திகைப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கம், இரண்டாவது, நம் இதயம் மற்றும், ஆன்மாவின் உள்ளாழத்தைத் தொடும் இயக்கம், மூன்றாவது, அழகின் கலையுணர்வு மற்றும், தியான மனநிலை பிறப்பிக்கும் நம்பிக்கையுணர்வு இயக்கம் என்று கூறியத் திருத்தந்தை, அவை மூன்று பற்றியும் விளக்கினார்.

கலைகளில் வெளிப்படும், வண்ணங்களின் கலவை, சொற்கள், மற்றும், ஒலிக்கோவைகள் ஆகியவை, நினைவுகள், உருவங்கள் மற்றும், உணர்வுகளை, இரண்டாவது இயக்கம் நம்மில் உருவாக்கும் என்று விளக்கிய திருத்தந்தை, வியப்பு, தன்னுணர்வு, பகிர்வு ஆகியவற்றை வழங்கும் இந்த மூன்று இயக்கங்களும், அமைதி, அடுத்தவரை அடக்கியாளும் ஆவலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளல், அடுத்தவரின் துன்பங்களை உணர்தல், அனைத்தோடும் நல்லிணக்கத்தோடு வாழ்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று கூறினார்.

நல்லிணக்கம், அழகு மற்றும், நன்மைத்தனத்தோடு ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை, கலைஞர்கள் பற்றி திருத்தந்தையர் புனிதர்கள் ஆறாம் பவுல், மற்றும் இரண்டாம் யோவான் பவுல் ஆகியோர் கூறியிருப்பதையும் குறிப்பிட்டார்.

உலகளாவிய கல்விக்கொள்கை வழியாக, தொன்போஸ்கோ மறைப்பணியும், Scholas Occurrentes அமைப்பும், தற்போதைய நெருக்கடியான சூழலில், கல்வி மற்றும், நலவாழ்வுக்காக ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

12 December 2020, 15:09