தேடுதல்

புதன் பொது மறைக்கல்வி உரை 021220 புதன் பொது மறைக்கல்வி உரை 021220 

இறைவேண்டுதல்களுக்கு விண்ணப்பித்த திருத்தந்தை

நைஜீரியாவிலும், எல் சால்வதோர் நாட்டிலும் நிகழ்ந்த இரு நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, சிறப்பான இறைவேண்டுதல்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 2 இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி உரையின் இறுதியில், நைஜீரியாவிலும், எல் சால்வதோர் நாட்டிலும் நிகழ்ந்த இரு நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, சிறப்பான இறைவேண்டுதல்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நவம்பர் 28, கடந்த சனிக்கிழமையன்று, நைஜீரியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில், நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள், கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறிய திருத்தந்தை, கொல்லப்பட்ட அனைவரையும், இறைவன், தன் அமைதியில் வரவேற்க செபிப்போம் என்று கூறினார்.

மேலும், இந்த அப்பாவி விவசாயிகளை இழந்து வாடும் குடும்பத்தினர் ஆறுதல் அடைவதற்கும், இத்தகையக் கொடுமைகளை மேற்கொள்ளும் வன்முறையாளர்கள் மனம்திருந்தி வாழவதற்கும் செபிப்போம் என்று, திருத்தந்தை, தன் நேரடி ஒளிபரப்பின் வழியே, மக்களிடம் விண்ணப்பித்தார்.

அத்துடன், 1980ம் ஆண்டு, டிசம்பர் 2ம் தேதி, எல் சால்வதோர் நாட்டில் நான்கு மறைபரப்புப் பணியாளர்கள், கொல்லப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவு, இப்புதனன்று சிறப்பிக்கப்படுவதை நினைவுறுத்தி, அவர்களுக்காக செபிக்கும்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

எல் சால்வதோர் நாட்டில் நிகழ்ந்துவந்த உள்நாட்டுப் போர் காலத்தில் அங்கு பணியாற்றிவந்த Maryknoll துறவுசபையைச் சேர்ந்த, Ita Ford, Maura Clarke, என்ற இரு அருள்சகோதரிகள், Ursuline துறவுசபையைச் சேர்ந்த அருள்சகோதரி Dorthy Kazel, மற்றும் தன்னார்வப்பணியாளர் Jean Donovan ஆகிய நால்வரும், துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர் என்பதை திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.

.உள்நாட்டுப் போரினால் உருவான பல்வேறு ஆபத்தானச் சூழல்களிலும், உணவையும், மருந்தையும் மக்களுக்கு, குறிப்பாக, வறியோருக்கு வழங்குவதில் முனைப்புடன் பணியாற்றிய இப்பெண்கள், மறைபரப்புப் பணியில் ஈடுபடும் சீடர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டுகள் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

மேலும், எல் சால்வதோர் நாட்டில் கொல்லப்பட்ட இந்த நான்கு பணியாளரின் 40ம் ஆண்டு நினைவாக, திருப்பீடத்தின் புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர் பணிப்பிரிவின் செயலர், கர்தினால் மைக்கில் செர்னி அவர்கள், உரோம் நகரின் Caravita சிற்றாலயத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2020, 15:02