தேடுதல்

மூவேளை செப உரையின்போது - 081220 மூவேளை செப உரையின்போது - 081220 

இறையருளுக்கு 'ஆகட்டும்' என பதிலுரைப்போம்

பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர்களாக ஒருநாள் மாறவேண்டும் என்ற நோக்கத்தில் நாம் படைக்கப்பட்டிருக்க, அன்னை மரியாவோ, கருவிலிருக்கும்போதே பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றவராக இருந்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இறைமகனின் தாயாகவிருக்கும் ஒருவர், கருவில் உருவானது முதலே பாவத்தின் துயர்களால் தொடப்படாதவராக இருக்கவேண்டும் என்ற இறைவனின் ஆவலை நிறைவுசெய்த, அமல உற்பவ அன்னையின் திருவிழா, மீட்பு வரலாற்றின் மிக உன்னத அதிசயங்களுள் ஒன்று என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படியாக இறைவன் நம்மைப் படைத்தார் என, புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (எபே.1:3-6, 11-12) கூறியுள்ளார், ஆனால், அன்னை மரியாவை, அதே இறைவன், கருவில் உருவானது முதலே மாசற்றவராகப் படைத்தார் என, டிசம்பர் 08, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட, புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழாவன்று ஆற்றிய மூவேளை செப உரையின்போது குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றவர்களாக ஒருநாள் மாறவேண்டும் என்ற நோக்கத்தில் நாம் படைக்கப்பட்டிருக்க, அன்னை மரியாவோ, கருவிலிருக்கும்போதே பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றவராக இருந்தார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வுலக வாழ்வின் இறுதியில் நமக்கு கிடைக்க உள்ளது, அன்னை மரியாவுக்கு வாழ்வின் துவக்கத்திலேயே கிடைத்தது என, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாவத்திலிருந்து விடுதலை பெறும் நிலைக்காக நாம் அனைவரும் இப்போதிருந்தே நம்மைத் தயாரிக்கவேண்டும், ஏனெனில், எந்தப் பாவியும் விண்ணுலகில் நுழையும்வண்ணம் தன்னை மாற்றிக்கொள்ள முடியும், ஏனெனில், கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின், முதன் முதலில் விண்ணுலகில் நுழைந்தவர், அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த திருடர்களில் ஒருவரே என மேலும் கூறினார்.

பாவிகளும் விண்ணரசில் நுழையலாம் என்பது, இறைவனின் பொறுமையை சோதிக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பு அல்ல என்ற திருத்தந்தை, மனிதர்களை ஏமாற்றலாம், ஆனால், கடவுளை நம்மால் ஏமாற்ற முடியாது என்பதால், பாவத்தை விலக்கி, இறைவனுக்கு 'ஆகட்டும்' என பதிலுரைப்போம் என்ற அழைப்பை விடுத்தார்.

நம் வெளிவேடங்களைக் களைந்து, நம் உண்மை நிலைகளை ஏற்றுக்கொள்வதுடன், இறைவனையும், நமக்கு அடுத்திருப்பவர்களையும், நம்மிடம் எதிர்பார்க்கப்பட்ட விதத்தில் நாம் அன்புகூரவில்லை என்பதை உணர்ந்து, நாம் செல்லும் பாதையே மனமாற்றப் பாதை, அப்பாதையின் துவக்கமாக, ஒப்புரவு எனும் அருளடையாளத்தைப் பெறுவதுடன், இறைவனுக்கும் அடுத்திருப்பவர்களுக்கும் எதிராக நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வோம் என மேலும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை மரியாவைப்போல், புனிதராகவும் மாசற்றவராகவும் நாமும் விளங்கவேண்டிய பாதையைத் தொடரும் நோக்கத்தில், அன்னையின் பராமரிப்பில் நம்மை ஒப்படைத்து, பாவத்திற்கு மறுப்பு சொல்வதுடன், இறையருளுக்கு 'ஆகட்டும்' என பதிலுரைப்போம் எனக் கேட்டு, தன் நண்பகல் மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2020, 13:24