தேடுதல்

Vatican News
மூவேளை செபவுரையின்போது - 201220 மூவேளை செபவுரையின்போது - 201220  (Vatican Media)

நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்மஸை சிறப்பிப்போம்

திருத்தந்தை: கொள்ளைநோயின் பாதிப்புக்களைக் கொண்டுள்ள இந்த கிறிஸ்மஸ் காலத்தில், எவ்வித ஆதரவும் இன்றி வாழும் மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை ஆற்றி, கிறிஸ்து பிறப்பை சிறப்பிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மை உணர்விலிருந்து விலகவைக்கும், நுகர்வுக் கலாச்சாரத்தால் ஆட்கொள்ளப்படாமல், அன்னை மரியாவின், 'உமது விருப்பப்படியே ஆகட்டும்' என்ற பதிலுரையை குறித்து சிந்தித்து செயல்படுவோம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவருகைக்காலத்தின் 4ம் ஞாயிறான டிசம்பர் 20ம் தேதி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பிறப்பு குறித்து அன்னை மரியாவுக்கு கபிரியேல் வானதூதர் முன்னறிவித்த ஞாயிறு நற்செய்தி வாசகம் (லூக் 1:26-38) குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இயேசுவின் பிறப்பு குறித்த முன்னறிவிப்பு, அன்னை மரியாவுக்கு மிக உயரிய மகிழ்வை தரும் செய்தியாக இருந்த அதேவவேளை, பெரும் துயர நிலையை சந்திக்கவைக்கும் செய்தியாகவும் இருந்தது என்பதை தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.

யோசேப்புக்கு மண ஒப்பந்தம் ஆகியிருந்த அன்னை மரியா, திருமணத்திற்கு முன்னரே கருவுற்றார் என்பதை மற்றவர் அறிய வந்தால், அது மரணதண்டனைக்கு இட்டுச்செல்லும் என்பதை அறிந்திருந்தும், இறைவனின் ஒளியை இதயத்தில் தாங்கியவராக, முழு வல்லமையுடன், இறைவனின் திட்டத்திற்கு, 'உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்' என, அன்னை மரியா பதிலுரைத்ததை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

தான் சொல்லும் 'ஆகட்டும்' என்ற பதிலால், தன் வாழ்வு பறிக்கப்படும் ஒரு நிலை இருப்பினும், அன்னை மரியா எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக இசைவு அளித்தது, நமக்கும் ஒரு பாடமாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, செபிக்க ஆவல் கொண்டாலும், இப்போது நேரமில்லை எனக் கூறி தள்ளிப்போடுவது, மற்றும், பிறருக்கு உதவவேண்டிய சூழல்களில், 'நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்' என ஒதுக்கிவைப்பது போன்ற மனிதர்களின் பழக்கங்களை சுட்டிக்காட்டினார்.

இத்தகைய வேளைகளில், உடனடியாக, 'ஆகட்டும்' என சொல்லவேண்டியதை அன்னை மரியாவின் பதிலுரை நமக்குச் சொல்லித்தருகின்றது, என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொள்ளைநோயின் பாதிப்புக்களைக் கொண்டுள்ள இந்த கிறிஸ்மஸ் காலத்தில், எவ்வித ஆதரவும் இன்றி வாழும் மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை ஆற்றி கிறிஸ்து பிறப்பை சிறப்பிப்போம் என, அனைவருக்கும் விண்ணப்பம் ஒன்றை விடுத்தார்.

பெத்லகேமின் மாடடைக் குடிலை அன்னை மரியாவும் யோசேப்பும், ஏழ்மையாலும், அன்பாலும் அழகுப்படுத்தியிருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள், நுகர்வுக் கலாச்சாரத்தால் களவாடப்படாமல் இருப்பதில் கவனமாக இருப்போம் என கேட்டுக்கொண்டார்.

21 December 2020, 15:18