தேடுதல்

மூவேளை செபவுரை வழங்கும் திருத்தந்தை - 061220 மூவேளை செபவுரை வழங்கும் திருத்தந்தை - 061220 

இறைவனின் வருகைக்காக மனமாற்றத்தின் பாதையில்...

திருத்தந்தை : மனமாற்றம் என்பது நம்மை எவ்வாறு பாவ மன்னிப்பு, மற்றும், இறையரசு குறித்த ஏக்கத்தின் பாதையில் அழைத்துச் செல்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனமாற்றத்தின் பாதையில் பயணத்தை மேற்கொண்டு, இறைவனின் வருகைக்காக நம்மை தயாரிப்போம், என இஞ்ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாவ மன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று திருமுழுக்கு யோவான் விடுத்துள்ள அழைப்பு குறித்து விவரிக்கும் இஞ்ஞாயிற்றுக்கிழமை நற்செய்தி வாசகத்தை (மாற். 1:1-18) மையப்படுத்தி தன் கருத்துக்களை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து பிறப்பிற்கு நம்மை தயாரிக்க அழைப்பு விடுக்கும் நற்செய்தி வாசகம் இது, என்று கூறினார்.

புனித திருமுழுக்கு யோவானின் பணிகுறித்து எடுத்துரைக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம், மனமாற்றம் என்பது நம்மை எவ்வாறு பாவ மன்னிப்பு, மற்றும், இறையரசு குறித்த ஏக்கத்தின் பாதையில் அழைத்துச் செல்கிறது என்பதைக் காட்டுகிறது என்றார் திருத்தந்தை.

மனமாற்றம் என்பது, ஒருவர் செல்லும் திசையையும், அவரின் நோக்கத்தையும் மாற்றி அமைப்பதை குறிப்பதோடு, நமது எண்ணப்போக்கையும் மாற்றியமைக்கிறது, என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறநெறி, மற்றும், ஆன்மீக வாழ்வில், மனமாற்றம் என்பது, தீயவழிகளில் இருந்து நல்வழிகளை நோக்கியும், பாவ வாழ்விலிருந்து இறை அன்பை நோக்கியும் செல்வதைக் குறிப்பிடுகின்றது என்றார்.

பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என பாலைவனத்தில் திருமுழுக்கு யோவான் விடுத்த அழைப்பு இதுவே என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பாவத்திற்குப் பரிகாரம் செய்வதையும், வாழ்வுப்பாதையை மாற்றியமைப்பதையும் நோக்கமாகக் கொள்ளாமல், நீரில் மூழ்கி திருமுழுக்குப்பெறுவதால் எவ்வித பலனுமில்லை, என்பதையும் எடுத்தியம்பினர்.

பாவத்திற்காக மனம் வருந்துதல், பாவத்திலிருந்து விடுதலை பெற ஆவல்கொள்ளல், பாவத்தை முற்றிலுமாக நம் வாழ்விலிருந்து விலக்கிவைத்தல் என்பவை, மனமாற்றம் நம்மில் எதிர்பார்ப்பவை என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  பாவத்தை விலக்குவது என்பது, பாவத்தோடு தொடர்புடைய, அனைத்து ஆசைகளையும் மனப்போக்குகளையும் விலக்கிவைப்பதை எதிர்பார்க்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

அதிகப்படியான சுகங்களை தூர விலக்கி, வாழ்விற்கு தேவையான பொருட்களை மட்டுமே கொண்டு, அதில் நிறைவுகண்ட புனித திருமுழுக்கு யோவான், நமக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார், ஏனெனில், பாவத்திலிருந்து விலகி இருப்பதைத் தொடர்ந்து, நாம் அடுத்தபடியாக, இறைவனையும் அவர் அரசையும் தேடுவதில் நம் கவனத்தைத் திருப்பவேண்டும் என்பதை அவரே நமக்கு காட்டுகிறார், என்றார்.

கடவுளரசைத் தேடி, அதற்காக வாழ்வது, மிகவும் சிரமம் நிறைந்த ஒன்று, ஏனெனில், நம்மை இவ்வுலகோடு கட்டிப்போடும் சங்கிலிகள் அதிகம் உள்ள நிலையில், மனமாற்றம் இறைவன் நமக்கு வழங்கும் அருள் என்பதை உணர்ந்து, அதற்கேற்றவகையில் செயல்படுவோம் என்ற அழைப்பையும், தன் மூவேளை செப உரையில் விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

06 December 2020, 12:47