தேடுதல்

Vatican News
உலக அமைதி வேண்டி, உரோம் நகரில் நடைபெற்ற பல்சமய வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் உலக அமைதி வேண்டி, உரோம் நகரில் நடைபெற்ற பல்சமய வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

திருத்தந்தையின் 54வது உலக அமைதி நாள் செய்தி

புயல் சூழ்ந்துள்ள கடலில் ஒரே படகில் பயணிக்கும் நாம் அனைவரும், பேணிக்காக்கும் கலாச்சாரத்தில் வளர்ச்சியடையாமல், உலக அமைதியை பெற இயலாது – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2021ம் ஆண்டு சனவரி முதல் தேதி, புத்தாண்டு நாளன்று, சிறப்பிக்கப்படும் 54வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புச் செய்தியொன்றை, டிசம்பர் 17ம் தேதி வெளியிட்டுள்ளார்.

"அமைதியின் பாதை, பேணிக்காக்கும் கலாச்சாரம்"

"அமைதியின் ஒரு பாதையாக, பேணிக்காக்கும் கலாச்சாரம்" என்ற தலைப்பில் திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியில், எட்டு கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

நமது பேணிக்காக்கும் அழைப்பிற்கு ஊற்றாக விளங்கும் படைக்கும் இறைவன்; பேணிக்காப்பதன் எடுத்துக்காட்டாக, படைக்கும் இறைவன்; இயேசுவின் பணிவாழ்வில் பேணிக்காத்தல்; இயேசுவைப் பின்பற்றுவோரின் வாழ்வில், பேணிக்காக்கும் கலாச்சாரம்; பேணிக்காக்கும் கலாச்சாரத்தின் அடிப்படையாக, திருஅவையின் சமுதாயக் கோட்பாட்டின் கொள்கைகள்; பொதுவானப் பாதையைக் காட்டும் திசைக்கருவி; பேணிக்காக்கும் கலாச்சாரத்திற்காக கல்வி புகட்டுதல்; பேணிக்காக்கும் கலாச்சாரம் இன்றி அமைதி இல்லை என்ற எட்டு கருத்துக்களில் திருத்தந்தை தன் செய்தியை வழங்கியுள்ளார்.

இச்செய்தியின் அறிமுகப் பகுதியில், உலகத்தலைவர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களுக்கும், ஆன்மீகத் தலைவர்களுக்கும், மத நம்பிக்கை கொண்ட அனைவருக்கும், நல்மனம் கொண்டோர் அனைவருக்கும், வருகின்ற ஆண்டு, உடன்பிறந்த நிலையில், நீதியில், அமைதியில் விளங்கும் ஆண்டாக அமைய தான் வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

கோவிட்-19 நெருக்கடியால் உருவான இழப்புகள்

2020ம் ஆண்டு, கோவிட்-19 உருவாக்கிய நெருக்கடியால், நெருங்கிய உறவுகளை இழந்தோர், வேலைகளை இழந்தோர் அனைவரையும் தான் எண்ணிப்பார்ப்பதாகக் கூறிய திருத்தந்தை, இந்தக் கொள்ளைநோய் காலத்தில் பணியாற்றிய நலவாழ்வுப் பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், ஆன்மீகப் பணியாளர்கள் அனைவரும் தன் எண்ணங்களில் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள், வழங்கப்படும் வேளையில், குறிப்பாக, அவை, வறியோரையும், உடல்நலத்தில் மிகவும் நலிந்தோரையும் அடைவதை, அரசுத்தலைவர்கள் உறுதி செய்யவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

இந்தக் கொள்ளைநோயின் காரணமாக, நம் மத்தியில் பலர், நற்செயல்களில் ஈடுபட்டிருந்த அதே வேளையில், நாட்டுப்பற்று என்ற பெயரில் உருவாகும் நாட்டு வெறி, இனவெறி, வேற்றினத்தவர் மீது அச்சம் ஆகிய காரணங்களால், போர்களும் மோதல்களும் உருவாகியிருப்பது வேதனையைத் தருகிறது என்று, திருத்தந்தை தன் அறிமுகப் பகுதியில் கூறியுள்ளார்.

இத்தகைய ஒரு சூழலில், நாம் ஒருவர் ஒருவரையும், இந்த படைப்பையும் பேணிக்காக்கும் கடமை உள்ளது என்பதால், இந்த ஆண்டுக்குரிய உலக அமைதிச் செய்தியை, "அமைதியின் ஒரு பாதையாக, பேணிக்காக்கும் கலாச்சாரம்" என்ற மையக்கருத்துடன் தான் வெளியிடுவதாக திருத்தந்தை கூறியுள்ளார்.

பேணிக்காக்கும் அழைப்பிற்கு ஊற்றாக விளங்கும் படைக்கும் இறைவன்

இறைவனோடும், இயற்கையோடும், ஏனைய மனிதர்களோடும் தொடர்புள்ள வகையில் மனிதர்கள் உருவாக்கப்பட்டனர் என்று பல்வேறு மதப் பாரம்பரியங்கள் கூறுகின்றன என்பதை முதல் கருத்தாக வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "ஆண்டவராகிய கடவுள்... ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்து, தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார்" (தொடக்க நூல் 2:8), "ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்" (தொடக்க நூல் 2:15) என்ற சொற்கள் வழியே, மனிதர்களுக்கும், இவ்வுலகிற்கும் உள்ள தொடர்பு விளக்கப்பட்டுள்ளது என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

பேணிக்காப்பதன் எடுத்துக்காட்டாக, படைக்கும் இறைவன்

கடவுளை, படைப்பவராக மட்டுமல்ல, படைப்பைக் காப்பவராகவும் நமது புனித நூல்கள் கூறுகின்றன என்பதை, இரண்டாவது கருத்தாகக் கூறியுள்ள திருத்தந்தை, படைப்பையும், ஏனைய மனிதர்களையும் காப்பதற்கென்று, ஒய்வு நாள் விதிகள், யூபிலி ஆண்டில் கடன்கள் இரத்து, அன்னியர், கைம்பெண், ஆகியோருக்கு நீதி போன்ற கட்டளைகளை இறைவன் வழங்கினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

பேணிக்காக்கும் கலாச்சாரத்தில் இயேசு

இயேசு, தன் பணி வாழ்வில், படைப்பின் மீதும், அயலவர் மீதும் அக்கறை கொண்டிருந்ததைப் போலவே, அவரது வழியைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் பேணிக்காக்கும் கலாச்சாரத்தில் வளர்வதற்கு அழைப்பு பெற்றுள்ளனர் என்பதை, மூன்றாவது, மற்றும் நான்காவது கருத்துக்களாக பதிவுசெய்துள்ளார் திருத்தந்தை.

திருஅவையின் சமுதாயக் கோட்பாட்டின் கொள்கைகள் என்ற ஐந்தாவது கருத்தில், ஒவ்வொரு தனி மனிதரின் மாண்பை நிலைநாட்டுதல், பொதுவான நலனில் அக்கறை கொண்டிருத்தல், அனைவரோடும் ஒருங்கிணைந்து பேணிக்காக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல், படைப்பை பாதுகாத்தல் என்ற நான்கு எண்ணங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

மனிதர்களை மையப்படுத்திய ஓர் எதிர்காலத்தை உருவாக்க

தூக்கியெறியும் கலாச்சாரமும், ஏற்றத்தாழ்வுகளும் பெருகிவரும் இன்றையச் சூழலில், மனிதர்களை மையப்படுத்திய ஓர் எதிர்காலத்தை உருவாக்க அரசுத்தலைவர்களுக்கு சிறப்பான ஓர் அழைப்பை, தன் ஆறாவது கருத்தாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை.

இவ்வுலகம் தொடரவேண்டிய பொதுவான பாதையில், மனிதர்களின் முன்னேற்றம் மையப்படுத்தப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு என்ற பெயரில் அரசுகள் போர்க்கருவிகளுக்கு செலவிடும் தொகையை, நீதியும், சமத்துவமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க செலவிடுவது மிகுந்த பயனளிக்கும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பேணிக்காக்கும் கலாச்சாரத்தை வளர்க்கும் கல்வி

பேணிக்காக்கும் கலாச்சாரத்தை வளர்க்க, கல்வி தலைசிறந்த ஒரு கருவி என்பதை, தன் ஏழாவது கருத்தாக வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பம், கல்விக்கூடங்கள், சமுதாயம், மதம் என்ற அனைத்து தளங்களிலும் இளையோருக்கு பேணிக்காக்கும் வழிமுறைகள் சொல்லித்தரப்பட வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

புயல் சூழ்ந்துள்ள கடலில் நாம் அனைவரும் ஒரு படகில் பயணிக்கிறோம் என்பதை, தன் இறுதிக் கருத்தாக வெளியிட்டுள்ள திருத்தந்தை, பேணிக்காக்கும் கலாச்சாரத்தில் வளர்ச்சியடையாமல், உலக அமைதியை நாம் பெறஇயலாது என்பதை, தன் 54வது உலக அமைதி நாளின் செய்தியில் கூறியுள்ளார்.

கடலின் விண்மீனாகவும், எதிர்நோக்கின் அன்னையாகவும் விளங்கும் மரியா, நம் கடல் பயணத்தில் வழிகாட்டும் கலங்கரை விளக்காக இருக்கிறார் என்பதை, தன் செய்தியின் இறுதி வரிகளில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அன்னை நம்மை இன்னும் மேன்மையான ஓர் உலகம் என்ற கரையில் சேர்ப்பாராக என்று கூறி, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

17 December 2020, 15:05