கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
திருப்பீடத்தின் கீழ் செயல்படும் கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளில், புதிதாக துறவு சபைகள் துவக்கப்படுவதற்கு, திருப்பீடத்தின் முன்அனுமதி தேவை என்ற சட்டத் திருத்தம் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள் குறித்த திருஅவைச் சட்டங்களில் சில திருத்தங்களை கொணர்ந்து, டிசம்பர் 7, இத்திங்களன்று 'motu proprio' எனப்படும், சுயவிருப்பத்தின்பேரில், என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளில், புதிய துறவு சபைகளோ, துறவு தொடர்புடைய குழுமங்களோ துவக்கப்படுவதற்கு, அப்பகுதியின் ஆயர் இசைவு வழங்குவதற்கு முன்னர், எழுத்து வடிவத்தில் திருப்பீடம் வழங்கும் அனுமதியைப் பெறவேண்டியது அவசியம் என அதில் கூறியுள்ளார்.
இவ்வாண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி, இலத்தீன் வழிபாட்டுமுறை திருஅவையில், புதிய துறவு சபைகள் துவக்கப்படுவதற்கு முன் எழுத்து வடிவத்தில் திருப்பீடத்திடமிருந்து அனுமதி பெறவேண்டும் என்பதை, “Authenticum charismatis” என்ற பெயரில், motu proprio ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து, தற்போது, அதே சட்டம், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கென வழங்கப்பட்டுள்ள இப்புதிய சட்டத்திருத்தம், இம்மாதம் 8ம் தேதி, செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வர உள்ளது.