லெபனான் நாட்டு மக்களுக்கு, திருத்தந்தையின் கிறிஸ்மஸ் செய்தி
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அமைதியின் இளவரசரான இயேசு பிறந்த நாள், லெபனானில் வாழும் அனைத்து மதங்களையும், இனங்களையும் சார்ந்தவர்களுக்கு, ஆறுதலையும், மனதிடனையும் கொணரட்டும் என்ற ஆசி மொழியுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் நாட்டு மக்களுக்கு, சிறப்பு கிறிஸ்மஸ் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
லெபனான் நாட்டில் பணியாற்றும் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் Béchara Boutros Raï அவர்கள் வழியே, திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், அங்குள்ள மக்கள், அண்மைய மாதங்களில் அடைந்துள்ள பெரும் இன்னல்களை தான் நினைவுகூர்வதாகக் கூறியுள்ளார்.
கேதுரு மரங்கள் நிறைந்தது லெபனான் நாடு என்பதை தன் செய்தியின் துவக்கத்தில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல எதிர்மறைச் சூழல்களிலும் உறுதியுடன் வளரும் கேதுரு மரங்களைப்போல், அந்நாட்டு மக்களும், இத்துன்பங்களிலிருந்து மீண்டுவரும் உறுதியைப் பெறுவர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
"காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்" (எசாயா 9:2) என்று இறைவாக்கினர் கூறியுள்ள சொற்களை தன் செய்தியில் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, இறைவனின் பராமரிப்பு, லெபனான் மக்கள் ஒவ்வொருவரையும் தாங்கிச் செல்லும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லெபனான் நாட்டைக் குறித்து விவிலியத்தின் பல இடங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், "நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்" (தி.பா. 92:12) என்று திருப்பாடலில் கூறப்பட்டுள்ள வரிகள், தனிப்பட்ட முறையில் நம் கவனத்தை ஈர்க்கின்றன என்பதை, திருத்தந்தை, இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
லெபனான் நாட்டிற்கு விரைவில் சென்று, அம்மக்களைச் சந்திக்க தான் விரும்புவதாக கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்கு முழு அமைதியும், வளமையும் திரும்ப, உலக சமுதாயம் உதவி செய்யவேண்டும் என்பதையும் இச்செய்தியின் வழியே விண்ணப்பித்துள்ளார்.
லெபனான் மக்கள், தங்கள் பாதையையும், நம்பிக்கையையும் இழந்துவிடாமல் இருக்க, பெத்லகேமின் விண்மீன் அவர்களுக்கு ஒளியூட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள, சிறப்பு கிறிஸ்மஸ் செய்தியை நிறைவு செய்துள்ளார்.