தேடுதல்

Vatican News
வத்திக்கான் உயர் அதிகாரிகளுக்கு கிறிஸ்மஸ் உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான் உயர் அதிகாரிகளுக்கு கிறிஸ்மஸ் உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

கோவிட் காலம், மனமாற்றத்தின் வாய்ப்பை வழங்கும் காலம்

திருத்தந்தை : பல்வேறு நெருக்கடிகளைக் கொணர்ந்துள்ள இந்த கொள்ளைநோய் காலம், உண்மை நிலைகளை அனைவரும் உணர உதவியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதர்கள் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்ற நிலையிருப்பினும், மனித பிறப்பு என்பது, சாவை நோக்கியதல்ல, மாறாக, துவக்கத்தை தன்னுள் கொண்டுள்ளது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் உயர் அதிகாரிகளுக்கு வழங்கிய ஓர் உரையில் கூறினார்.

வத்திக்கான் உயர் அதிகாரிகளை, டிசம்பர் 21, இத்திங்கன்று திருப்பீடத்தில் சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறப்பையும்,  துவக்கத்தையும் இணைத்து யூத தத்துவயியலாளர் Hannah Arendt அவர்கள் கூறிய வார்த்தைகளுடன் தன் உரையைத் துவக்கினார்.

மாடடைக் குடிலில் கிடத்தப்பட்டிருந்த இறைமகனின் மறையுண்மையையும், பாஸ்கா மறையுண்மையையும் நாம் உற்று நோக்கும்போது, நாம் பாதுகாப்பற்ற நிலையிலும், தாழ்ச்சியுடனும், முற்சார்பு எண்ணங்களின்றியும் செயல்படும்போதே நம் உண்மையான இடத்தைக் கண்டுகொள்வோம் என திருஅவை அதிகாரிகளிடம் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு நெருக்கடிகளைக் கொணர்ந்துள்ள இந்த கொள்ளைநோய் காலம், உண்மை நிலைகளை அனைவரும் உணர உதவியுள்ளது, என்றார்.

இந்த கோவிட் காலம் நமக்கு மனமாற்றத்தின் வாய்ப்பை வழங்கும் காலமாக நோக்கப்படலாம் என்று கூறியத் திருத்தந்தை, கோவிட் கொள்ளைநோயிலிருந்து உலகம் விடுதலைப் பெற, இவ்வாண்டு மார்ச் மாதம் 27ம் தேதி, தான் புனித பேதுரு வளாகத்தில், செபித்ததையும், இதே காலத்தில், 'அனைவரும் உடன்பிறந்தோர்' என்ற திருமடலை தான் வெளியிட்டதையும் குறிப்பிட்டார்.

நெருக்கடி என்பதன் முழுப்பொருளைக் கண்டுகொள்ள, இந்த கோவிட் காலம் நம் அனைவருக்கும் உதவுகின்றது என்று கூறியத் திருத்தந்தை, வரலாறு முழுவதும் இதற்கு உதாரணங்கள் உள்ளன என்பதை எடுத்துரைக்க, விவிலியத்தில், ஆபிரகாம், மோசே, எலியா, திருமுழுக்கு யோவான் புனித பவுல், ஆகியோரின் வாழ்வில் இடம்பெற்ற நெருக்கடிகளை சுட்டிக்காட்டினார்.

நாற்பது நாள் நோன்பிருந்தபின், இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனை குறித்தும், கெத்சமனித் தோட்டத்திலும், சிலுவையில் தொங்கியபோதும் இயேசு எதிர்நோக்கிய நெருக்கடி நிலை குறித்தும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நெருக்கடி என்பதற்கும், முரண்பாடு என்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நெருக்கடியும், புதுப்பித்தலுக்கான அழைப்பை தன்னுள் கொண்டுள்ளது என்பதையும் நினைவூட்டினார்.

இறைவன் நமக்கென வகுத்துள்ள திட்டங்களை அறிந்துகொள்ள இறையருள் வழங்கப்படும் காலமாக நெருக்கடி காலத்தை நோக்குவோம் என்று கூறியத் திருத்தந்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடைபோடுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

நற்செய்தியை அறிவிப்பதை, அதிலும் குறிப்பாக, ஏழைகளுக்கு அறிவிப்பதில் ஒன்றிணைந்து செயல்படுவதை கிறிஸ்மஸ் அன்பளிப்பாகக் கொள்வோம் எனக்கூறி, வத்திக்கான் உயர் அதிகார்களுக்கு வழங்கிய வாழ்த்துச்செய்தியை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

21 December 2020, 15:10