தேடுதல்

Vatican News
MOROCCO நாட்டில் காரித்தாஸ் அமைப்பின் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம் MOROCCO நாட்டில் காரித்தாஸ் அமைப்பின் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம்  (AFP or licensors)

"Cube Radio" - திருத்தந்தையின் காணொளிச் செய்தி

புனிதம் மிகுந்த கிறிஸ்து பிறப்பு நிகழ்விலும், நமது பொதுவான இல்லமான பூமிக்கோளத்தைக் காக்கும் முயற்சியிலும் இளையோரை அதிகம் அதிகமாக ஈடுபடுத்துவதற்கு திருத்தந்தையின் அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் வெனிஸ் நகரில் சலேசிய துறவு சபையினரின் கண்காணிப்பில் இயங்கிவரும் பல்கலைக்கழகம், இளையோரை மையப்படுத்தி நடத்திவரும் "Cube Radio" என்ற ஊடகமுயற்சிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 26, இவ்வியாழனன்று காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

இறைவாக்கையும், Laudato si திருமடலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும், இணைத்து, திருவருகைக்காலத்திற்கென இளையோர் உருவாக்கியுள்ள வானொலித் தொடர் நிகழ்ச்சிக்காக தான் நன்றி தெரிவிப்பதாக திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

புனிதம் மிகுந்த கிறிஸ்து பிறப்பு நிகழ்வுக்கென தயார் செய்ய சமூக வலைத்தளங்கள் வழியே மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியிலும், நமது பொதுவான இல்லமான பூமிக்கோளத்தைக் காக்கும் முயற்சியிலும் இளையோரை அதிகம் அதிகமாக ஈடுபடுத்துவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்காணொளி செய்தி வழியே அழைப்பு விடுத்துள்ளார்.

“Klic dobrote” இசை நிகழ்ச்சிக்கு செய்தி

மேலும், சுலோவேனியா நாட்டில் காரித்தாஸ் அமைப்பு நிறுவப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவையொட்டி, அங்கு “Klic dobrote” என்ற இசை நிகழ்ச்சியை நடத்தும் அவ்வமைப்பினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 25 இப்புதனன்று செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

"தாராள மனதிற்காக அழைப்பு" என்று பொருள்படும் “Klic dobrote” என்ற இந்த இசை நிகழ்ச்சி வழியே திரட்டப்படும் தொகை, பல்வேறு பிறரன்பு முயற்சிகளிலும், மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலும் பயன்படும் என்பதை அறிந்து தான் மகிழ்வதாக திருத்தந்தை கூறியுள்ளார்.

மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் அதிகமான பொறுமை தேவைப்படுகிறது என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “Klic dobrote” இசைநிகழ்ச்சி எந்த ஒரு தனிப்பட்ட குழுவையும் சார்ந்திராமல், மக்களின் முயற்சியாக விளங்கவேண்டும் என்று தான் வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

26 November 2020, 14:36